நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவா? உச்ச நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு நடந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

2024 நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும். வினாத் தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை ஒன்றாக சேர்த்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜேபி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது தேர்வு மையம் வாரியாக தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஜூலை 20ஆம் தேதி தேர்வு மையம் வாரியாக முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் ராஜாஸ்தானில் மட்டும் 600 மதிப்பெண்களுக்கும் அதிகமாக 4000 மாணவர்கள் பெற்றிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் நீட் வழக்கு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹூடா, “அகில இந்திய தரவரிசை மற்றும் தேர்வு மையங்களின் வரிசை எண்களை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது. “நீட் முடிவு தரவு” என்ற பெயரில் 5000 பிடிஎப் பைல்களை வெளியிட்டுள்ளனர்” என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி, ஆனால் மையம் வாரியாக மற்றும் நகரம் வாரியாக வழங்கப்பட்டுள்ளதே என்று கூற, வழக்கறிஞர் ஹூடா அகில இந்திய தரவரிசைகள் அதில் இல்லை என்று மீண்டும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், “வினாத்தாள் இ ரிக்ஷாவில் எடுத்துச் செல்லப்பட்டது என்று நான் கூறியபோது, ஓஎம்ஆர் விடைத்தாள் எடுத்துச் செல்லப்பட்டதாக என்.டி.ஏ கூறியது” என்றார்.

உடனே தலைமை நீதிபதி, “இ-ரிக்ஷாவில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் அந்த புகைப்படத்தில் இருப்பது ஓஎம்ஆர் சீட் என்கிறார்கள். தற்போது நாம் விஷயத்துக்கு வருவோம். நீட் முடிவு தரவுகளிலிருந்து என்ன தெரியவருகிறது என்று சொல்லுங்கள்” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் ஹூடா, “12ம் வகுப்பில் தோல்வியடைந்த ஒரு பெண், நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ராஜ்கோட்டில் 1900 மாணவர்கள் 700க்கும் அதிகமாக பெற்றுள்ளனர். 115 மாணவர்கள் 650க்கும் அதிகமாக பெற்றுள்ளனர். சிகாரில் 1000 மாணவர்கள் 700க்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நகர ஒருங்கிணைப்பாளர்கள், தனியார் பள்ளிகளுக்கு சொந்தமானவர்கள், கண்காணிப்பாளர்கள், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் என பயிற்சி மையங்களுக்கும் – தனியார் பள்ளிகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கக்கூடும் என்பதை நிராகரிக்க முடியாது.

சிபிஎஸ்இ பாடத்திட்டம் நீட் சிலபஸுடன் முழுமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குஜராத்தில் பள்ளித் தேர்வில் தோல்வியுற்ற ஒரு பெண்.. பெல்காவி வரை சென்று நீட் தேர்வு எழுதி 705 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்” என்றார்.

உடனே தலைமை நீதிபதி, பெலகாவியை சந்தேகத்திற்குரிய வழக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்த வெற்றி விகிதம் என்ன.. சிகார் தேர்வு மையங்களின் நிலைமை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஹூடா, “27,216 மாணவர்கள் சிகாரில் இருந்து தேர்வு எழுதினர். 8225 பேர் 500க்கு மேல் பெற்றனர்” என்று தெரிவித்தார்.

இன்று காலை நடந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி,   “பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறி மதிய உணவு இடைவெளிக்கு பின் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

’பணம் இருந்தால் இந்திய தேர்வு முறையை வாங்கலாம்’ : ராகுல் குற்றச்சாட்டு!

ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர தடை நீக்கம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share