”நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. எனினும் மாணவர்கள் அளித்துள்ள புகார்கள் குறித்து குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தப்படும்” என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மே 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்விற்கான முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
ஆனால், அந்த 67 மாணவர்களில் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்களின் பதிவெண்கள் அடுத்தடுத்து இருந்ததால் தேர்வில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக சக மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், மே 5ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மறுத் தேர்வை நடத்தக்கோரியும் நேற்று மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் மாணவர்களின் புகார் குறித்து விரிவான விசாரணை வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) மாணவர்களால் குவிந்து வரும் புகார்களை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்த கோரியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி இன்று (ஜூன் 8) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “கடந்த மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடை பெற்றது. 720 மதிப்பெண்ணுக்கு 718 மற்றும் 719 மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை. கருணை மதிப்பெண் வழங்கியதால், மாணவர்களுக்கு 718 மற்றும் 719 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.
நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தேர்வு துவங்கிய பின்பு தான் வினாத்தாள் கசிந்தன. தேர்வு முகமை தரப்பில் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பே இல்லை.
நீதிமன்ற உத்தரவுப்படி 1600 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதினர். 2018ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின் படியே, தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு நேரம் குறைவாக இந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. ஒரு கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக கருணை மதிப்பெண் வழங்கப்படவில்லை.
தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்படும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு குறித்து மாணவர்கள் அளித்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த குழு அமைக்கப்படும். விசாரணைக்குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.” இவ்வாறு அவர் பேசினார்.
நீட் தேர்வுக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு!
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில், பல மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி அரசாங்கங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியால் நடத்தப்படும் மகாராஷ்டிரா அரசாங்கமும் நீட் தேர்வினால் தங்கள் மாநில மாணவர்களுக்கு எதிராக அநீதி இழைத்ததாக குற்றம் சாட்டி அதனை ரத்துசெய்யும் படி கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியா – பாரத் : மோடியின் 3வது ஆட்சியில் ஆளுநரின் முதல் சர்ச்சை!
கடைசி வரை போராடிய கேப்டன் மகன்! விருதுநகரில் நடந்தது என்ன?
Comments are closed.