நீட் உள்ளாடை சர்ச்சை: தேசிய தேர்வு முகமை விளக்கம்

Published On:

| By admin

நீட் தேர்வு எழுத சென்ற மாணவியிடம் உள்ளாடையை அகற்ற சொன்னதாக மாணவியின் தந்தை அளித்த புகாருக்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 17) நீட் தேர்வு நடைப்பெற்றது, தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் சோதனையின் போது மாணவிகளிடம் உள்ளாடையை அகற்றி விட்டு உள்ளே செல்லுமாறு வற்புறுத்தியதாக அப்பெண்ணின் தந்தை கொல்லம் புறநகர் எஸ்பியிடம் புகார் அளித்திருந்தார். உள்ளாடையில் மெட்டல் கொக்கி இருப்பதாக கூறி அகற்ற வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் தனது மகள் மனரீதியாக பாதிக்கப்பட்டதால் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாருக்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. இன்று (ஜூலை 19) அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்வு நடந்த நிலையில் உடனடியாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இருப்பினும் தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்ட போது அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் மாணவியின் தந்தை அளித்த புகார் உண்மை அல்ல. கற்பனையானது தவறான உள்நோக்கத்தோடு புகார் அளித்திருப்பாதாக தேர்வு மைய கண்காணிப்பாளர் கூறுகிறார்.

நீட் தேர்வு நடக்கும் அறைக்குள் மெட்டல் பொருட்கள் எதுவும் கொண்டு செல்லக் கூடாது என்பது விதிமுறை ஆகும். ஆனால் மாணவிகளின் உள்ளாடையை அகற்ற வேண்டும் என்பது எங்கள் விதிமுறைகளில் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel