கடும் சோதனைகளுடன் தொடங்கியது நீட் தேர்வு!

Published On:

| By christopher

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 499 நகரங்களில் பலத்த சோதனைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு இன்று (மே 7) தொடங்கியது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இத்தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறும்.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 20,87,445 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.  அதில் 11,84, 502 மாணவிகளும், 9,02,930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் அடங்குவர்.

தமிழ்நாட்டில் இருந்து 1,47,581 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

தேர்வு சரியாக 2 மணிக்கு தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியில் 1.30 மணி வரை மட்டுமே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதற்கு முன்னர் அங்கிருந்த அதிகாரிகளால் மாணவர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டனர். தேர்வர்கள் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அதே வேளையில் தேர்வு அறைக்கு மாணவர்கள் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. தலைமுடியில் ஜடை பின்னல் போட அனுமதிக்கப்படவில்லை. கலைந்த தலைமுடியுடன் தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சரிபார்த்து மாணவர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ரேடியோவில் இந்தி திணிப்பு: மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!

நித்யானந்தா ஆதீனங்களை பிடித்தது இப்படித்தான்! எக்ஸ்குளுசிவ் வீடியோ!