“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” என ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஜூன் 18) கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் மற்றும் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருணை மதிப்பெண்கள் போன்றவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்.வி.பட்டி ஆகியோரின் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசின் சார்பில் வழக்கறிஞர் கானு அகர்வால் மற்றும் வர்தமான் கௌசிக் ஆகியோர் ஆஜராகினர்.
அவர்களிடம் நீதிபதி எஸ்.வி.பட்டி கூறுகையில், “மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தவறு இழைப்பது சமூகத்துக்கு ஆபத்தானது. நீட் தேர்வில் மோசடி செய்த ஒரு மாணவர் மருத்துவரானால், சமூகத்திற்கு அவர் எத்தகைய தீங்கு விளைவிப்பார் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
இந்த தேர்வுக்கு தயாராவதற்கு மாணவர்கள் கொடுக்கும் உழைப்பை நாம் அனைவரும் அறிவோம். நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களின் அபரிமிதமான உழைப்பைக் கருத்தில் கொண்டு முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
நீங்கள் எடுக்கும் நடவடிக்கையால் நீட் தேர்விலும், உங்கள் செயல்திறனிலும் பொதுமக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்.
ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கு சூழலை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”நீட்- இளங்கலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 6-ம் தேதி நடைபெற உள்ளதால், விசாரணையின் நிலை தெரிய வேண்டியது அவசியம்” என்று வாதிட்டனர்.
அதனை ஏற்று நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான மற்றொரு வழக்குடன் சேர்த்து அனைத்து மனு மீதான விசாரணயை ஜூலை 8ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முதல் வார வசூலில் மகுடம் சூடிய மகாராஜா!
பொன்முடி, வளர்மதியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!