நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. 1.30 மணிக்கு பிறகு அனுமதியில்லை!

இந்தியா

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று (ஜூலை 17) நடைபெற உள்ளது. சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்படுள்ளன.

தேசிய தேர்வு முகமை நடத்தும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 10 லட்சத்து 64 ஆயிரம் பேர் மாணவிகள் ஆவர். இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 30க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 22 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த நிலையில் மாணவர்களை சோதிப்பதற்கான இடங்கள், சமூக இடைவெளி விட்டு நிற்க குறியீடுகள் என தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் 50 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் தவறாக பதில் அளித்தால், ஒரு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் வழங்கப்படும்.

கடந்த 12ம் தேதி நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதில் தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவுரைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு மையத்துக்குள் காலை 11.40 மணி முதல் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாணவருக்கும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் வந்து சேர வேண்டும். மதியம் 1.30 மணிக்கு மேல் நுழைவாயில் மூடப்படும். அதற்கு மேல் வரும் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நீட் தேர்வுக்கு வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, என ஏதாவது ஒரு அரசு புகைப்பட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஹால் டிக்கெட்டின் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் வண்ண புகைப்படமும் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும், ஒன்றாம் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒத்துப் போக வேண்டும். தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கையெழுத்து ஹால்டிக்கெட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும்.

தற்போது கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு இருப்பதால், தேர்வர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தேர்வு மையத்திலேயே தேர்வர்களுக்கு என்.95 முகக்கவசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விட அதிகமாக இருந்தால், அந்த தேர்வர் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில், 50 மி.லி. சானிடைசர் பாட்டில் கொண்டு செல்லலாம்.

தேர்வு கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் வெளியே செல்லக் கூடாது. தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரண்டு முறை வருகை படிவத்தில் நேரம் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் கொடுக்கவில்லை என கருதப்படும்.

இன்று நடைபெறும் 2022-23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை தேர்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து அறிவுரைகள், வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

**கிறிஸ்டோபர் ஜெமா**

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *