நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வியின் பதிலை டெல்லி ஐஐடி இயக்குனர் தலைமையில் குழு அமைத்து நாளை (ஜூலை 23) மதியம் 12 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 22) உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான இளங்களை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகள் நடந்ததாக பல்வேறு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
அந்தவகையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹெக்டே ஆஜராகி, “இந்த தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை. மோசடி கும்பல் வினாத்தாளை கசியவிட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிட்டதற்கு பிறகு தான் இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை விசாரணை நடத்தியிருக்கிறது.
மேலும், இந்த வழக்கை மிகவும் காலதாமதமாக ஜூன் 22-ஆம் தேதி தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார்கள். தேர்வு நடைபெற்ற மே 5-ஆம் தேதிக்கு முந்தைய நாள் காலை அல்லது இரவு நேரத்தில் வினாத்தாளை கசியவிட்டுள்ளனர்” என்றார்.
இதனை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜராகி, “குறைந்தபட்சம் நீட் தேர்வில் தேர்சி பெற்ற மாணவர்களுக்காவது மறுதேர்வு நடத்த வேண்டும். இதுதான் பெரும்பாலான மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. அப்போது தான் தேர்வு முகமை மீதான நம்பிக்கை மாணவர்களுக்கு ஏற்படும்” என்றார்.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “நீட் தேர்வு வினாத்தாளை கசியவிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மே 4-ஆம் தேதியை வினாத்தாளை கசியவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய 19-ஆம் கேள்விக்குரிய பதிலை ஆய்வு செய்ய ஐஐடி டெல்லி இயக்குனர் தலைமையில் மூன்று நிபுணர் குழுவை அமைத்து நாளை மதியம் 12 மணிக்குள் தேர்வுக்கான விடையை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக ஆனந்தன் நியமனம்!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 24-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!