பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் துணை முதல்வராக நேற்று (ஜூலை 2) பதவியேற்றார். அவருடன் சரத் பவாரின் தீவிர விசுவாசிகள் என அறியப்பட்ட ஷகன் புஜ்பால் மற்றும் திலீப் வால்ஸ் பாட்டீல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து 9 பேரையும் தகுதிநீக்கம் செய்யக்கோரி மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு மனு தாக்கல் செய்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ”நாங்கள் சட்டமன்ற சபாநாயகரிடம் ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராக தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளோம்.
என்சிபிக்கு எதிராக கட்சியை விட்டு வெளியேறுவதற்கு முன் அவர்கள் யாருக்கும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளோம்” என்று கூறினார்.
மேலும் ”தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி சரத் பவாரிடமே இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது” என்றார் ஜெயந்த் பாட்டீல்.
இதற்கிடையே தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையத்தில் முறையிட அஜித்பவார் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் என்சிபிக்கு ஆதரவாக 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது 9 பேர் அமைச்சரவையில் பதவி பெற்றுள்ள நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க அஜித் பவாருக்கு குறைந்தது 36 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதுகுறித்து என்சிபியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ கூறுகையில், “ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதல்வராக சில தலைவர்களுடன் இணைந்த அஜித் பவாருக்கு 36 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லை.
கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே மற்றும் மாநில பிரிவு தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் 53 எம்எல்ஏக்களையும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்” என்று கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமர் மோடி வீடு மீது பறந்த டிரோன்… தலைநகரில் பரபரப்பு!
திருப்பதியில் புதுகெட்டப்பில் வலம் வந்த தனுஷ்