திகார் சிறை வார்டன், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மும்பையைச் சேர்ந்த வேதியியலாளர் ஆகியோரால் நடத்தப்பட்ட ஆய்வகத்தில் 95 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றுக்காக செயற்கை மருந்துகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள ரகசிய ஆய்வகம் பற்றி உளவுத்துறை எச்சரித்திருந்தது
இதையடுத்து, போதைப்பொருள் கட்டுப்பாடு பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, கிரேட்டர் நொய்டாவில் அக்டோபர் 25-ம் தேதி சோதனை நடத்தியது.
சோதனையின் போது டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் திகார் சிறை கண்காணிப்பாளரும் அந்த வளாகத்திற்குள் இருந்தனர்.
இருவரும் பல்வேறு இடங்களில் இருந்து மெத்தாம்பெட்டமைனை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ரசாயனப் பொருட்களைப் பெறுவதிலும், இயந்திரங்களை இறக்குமதி செய்வதிலும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் நிறுவனமான ‘கார்டெல் டி ஜலிஸ்கோ நியூவா ஜெனரேசியன்’ கும்பலும் இங்கே போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
பல்வேறு ரசாயனங்கள் மற்றும் நவீன உற்பத்தி இயந்திரங்களுடன், சுமார் 95 கிலோ மெத்தாம்பேட்டமைன் திட மற்றும் திரவ வடிவங்களில் இருப்பது இந்த ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட டெல்லி தொழிலதிபர், ஏற்கனவே போதைப்பொருள் வழக்குக்காக வருவாய் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டவர். அப்போது அவர் திகார் சிறை கண்காணிப்பாளருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
சிறை கண்காணிப்பாளர், போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான ரசாயனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் அவருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
மேலும் உற்பத்தி செயல்முறையை மேற்பார்வையிட மும்பையைச் சேர்ந்த வேதியியலாளர் ஒருவரும் இவர்களுடன் இணைந்தார். அதே நேரத்தில் டெல்லியில் வசிக்கும் ஒரு கார்டெல் உறுப்பினரால் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நான்கு பேரும் அக்டோபர் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், ரஜோரி கார்டனில் இருந்து டெல்லி தொழிலதிபரின் கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்த சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட நிதி மற்றும் சொத்துகளை அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : தேவர் ஜெயந்தி முதல் அரை நாள் விடுமுறை வரை!
கிச்சன் கீர்த்தனா: ஷாஹி ரசமலாய்!
வாக்காளர் அட்டையை திருத்துவது எப்படி?