போதை பழக்கத்தை தடுக்க புதிய திட்டம்!
போதை பழக்கத்தை தடுத்து நிறுத்துவதற்காக ‘மிஷன் ஸ்பந்தன்’ என்ற திட்டத்தை, போதைப்பொருள் தடுப்பு அமைப்பு (Narcotics Control Bureau) முன்னெடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக போதை பொருள் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் சமூகத்தில் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
கடந்த நவம்பர் 29 ஆம் தேதி இலங்கை கடற்படை அளித்த தகவலின் படி, அரபிக்கடலில் 500 கிலோ எடையுள்ள கிரிஸ்டெல் மெத் என்ற போதை பொருளை இந்திய கடற்படை கைப்பற்றியது.
இதற்கு முன்னதாக பிப்ரவரி 27ஆம் தேதி, குஜராத்தின் போர்பந்தரின் அருகே ஒரு படகில் 3300 கிலோ போதை பொருள்கள் இந்திய கடற்படையும் போதைபொருள் தடுப்பு பிரிவும் இணைந்து நடத்திய ஆப்ரேஷனில் கைப்பற்றப்பட்டது
இந்நிலையில்தான் போதை பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்துவதற்காக ‘மிஷன் ஸ்பந்தன்’ என்ற திட்டத்தை மத்திய அரசாங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆர்ட் ஆஃப் லிவிங்க், பிரம்ம குமாரீஸ், இஸ்கான், சந்த் நிரன்கரி அறக்கட்டளை மற்றும் ராம் சந்திர மிஷன் ஆகிய ஐந்து ஆன்மீக அமைப்புகளுடன் போதைபொருள் தடுப்பு அமைப்பு நேற்று (டிசம்பர் 2) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
‘மிஷன் ஸ்பந்தன்’ போதை பொருள் இல்லா இந்தியாவை உருவாக்கும்” என போதை பொருள் தடுப்பு அமைப்பின் இயக்குநர் அனுராக் கார்க் தெரிவித்தார்.
“இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி போதைப் பொருள் தடுப்பு அமைப்பு தொழில்நுட்ப வசதிகள், கல்வி வளங்களை வழங்கும். மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
ஆன்மீக அமைப்புகள் அடிமட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இளைஞர்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் மற்றும் சமூக ஈடுபாடு முயற்சிகளை வழிநடத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உயர்ந்த தங்கம் விலை… நகைபிரியர்கள் அதிர்ச்சி
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு : மக்களவையில் திமுக நோட்டீஸ்!