மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஜூன் 4 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்கை பதவியில் இருந்து நீக்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இதுவரை பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
மேலும், கடந்த மே 28 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களை தரதரவென இழுத்து சென்று டெல்லி போலீஸ் கைது செய்தது.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வந்த ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த மல்யுத்த வீரர்கள், நாட்டிற்காக அவர்கள் வென்ற பதக்கங்களையே கங்கையில் வீசுவதற்காக நேற்று (மே 30) ஹரித்துவாருக்கு சென்றனர்.
ஆனால் பதக்கங்களை கங்கையில் வீசவிடாமல் விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகைத் தடுத்து நிறுத்தினார்.
இதனையடுத்து 5 நாட்களுக்குள் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யவில்லை என்றால் நிச்சயம் பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் மல்யுத்த வீரர்களுக்கான ஆதரவும் அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள், பிற அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜூன் 4 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (டி.ஒய்.எஃப்.ஐ) மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எஃப்.ஐ) அமைப்புகள் இன்று (மே 31) கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
இது குறித்து டி.ஒய்.எஃப்.ஐ தலைவர் ரஹீம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜூன் 4 அன்று டி.ஒய்.எஃப்.ஐ மற்றும் எஸ்.எஃப்.ஐ இணைந்து போக்ஸோ குற்றவாளியான பிரிஜ் பூஷனை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், மல்யுத்த வீரர்கள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரியும், போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும் ஒரு போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்த போராட்டத்திற்கு அனைத்து ஆதரவாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
சுரானா குழுமத்தின் ரூ.248 கோடி முடக்கம்!
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்!