இந்தியா,இலங்கையில் போதை மருந்துக் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவதாக தானாக முன் வந்து பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. நேற்று (ஜூலை 20) தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் தொடர்பான 22 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.
குணா என்கிற குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜ் ஆகிய இலங்கை போதை பொருள் மாஃபியா கும்பல் தலைவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜா சலிம் என்பவரோடு இணைந்து போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தமிழ்நாட்டிலும் இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து தாமாகவே முன்வந்து என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது.
நேற்று நடந்த சோதனையில் இது தொடர்பான பல டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டது., விசாரணை தொடர்கிறது என்று என்.ஐ.ஏ. ஜூலை 20 வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
“இந்த போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்காரர்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காகவும் அதன் வன்முறை நடவடிக்கைகளுக்காகவும் பணியாற்றி வருகின்றனர்” என்று என்.ஐ.ஏ. தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
வேந்தன்