76 ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் (ஆகஸ்ட் 13) முதல் (ஆகஸ்ட் 15) வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தார்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு தேசியக் கொடியை ஏற்றும்போது சிலவற்றைத் தவறாமல் கவனிக்க வேண்டும்.
தேசியக் கொடியை ஏற்றுவதற்கான விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை எனில், அது நாட்டுக்கு அவமரியாதை இழைத்ததற்குச் சமமாகும்.
அதற்கு உரிய தண்டனைகள் சட்டப்படி வழங்கப்படும். தேசியக் கொடியை ஏற்றுவதற்கான விதிமுறைகளை தேசிய சின்னங்கள் அவமரியாதை சட்டம் (1971), தேசியக் கொடி விதிகள் (2002) ஆகியவை விரிவாக வழங்குகின்றன.
தேசியக் கொடியின் வடிவம்:
தேசியக் கொடி செவ்வக வடிவில் இருப்பது கட்டாயம். நீளத்துக்கும் உயரத்துக்கும் இடையேயான விகிதம் கண்டிப்பாக 3:2 என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த விகிதத்துக்கு உள்பட்டு தேசியக் கொடி எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தயாரிப்புப் பொருள்:
பருத்தி நூல், கம்பளி நூல், பட்டு, காதி உள்ளிட்டவற்றில் கையால் நெய்யப்பட்ட கொடிகளைப் பயன்படுத்தலாம். இயந்திரத்தில் பாலியஸ்டரால் உருவாக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம் என விதிகளில் கடந்த ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொடியை யாா் ஏற்றலாம்?
நாட்டில் உள்ள யாா் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏற்றலாம்; கையில் ஏந்தலாம். அதற்கு எந்தவிதத் தடையுமில்லை. தனியாா் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவையும் ஆண்டின் எந்த நாள்களிலும் தேசியக் கொடியை ஏற்றலாம். அதே வேளையில், கொடியை ஏற்றுவது விதிகளுக்கு உள்பட்டு இருக்க வேண்டியது அவசியம்.
கொடியை எப்போது ஏற்றலாம்?
பொது வெளியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டால், சூரிய உதயம் முதல் மறைவு வரை மட்டுமே பறக்கவிடப்பட வேண்டும் என முன்பு விதி இருந்தது. ஆனால், கடந்த மாதம் அந்த விதி திருத்தப்பட்டு இரவு நேரங்களிலும் இனி தேசியக் கொடியைப் பறக்கவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் கொடி இடம்பெறலாமா?
மக்களின் வாகனங்களின் முகப்புப் பகுதியில் தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது. நாட்டின் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில ஆளுநா்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள், முதலமைச்சர்கள் மாநில அமைச்சா்கள், மக்களவைத் தலைவா், மாநிலங்களவை துணைத் தலைவா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட சிலரது வாகனங்களில் மட்டும் தேசியக் கொடி பறக்கவிடப்படலாம்.
கொடியேற்றும்போது செய்ய வேண்டியவை:
பிற கொடிகளுக்கு மத்தியில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டால், மற்ற கொடிகளைவிட உயரமாகவோ அல்லது ஒரே உயரத்திலோ பறக்கவைக்க வேண்டும். மற்ற கொடிகளை விடக் குறைவான உயரத்தில் தேசியக் கொடி பறக்கக் கூடாது.
தேசியக் கொடியின் காவி நிறம் எப்போதும் மேல்பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும். பச்சை நிறம் கீழ்பகுதியில் இருக்க வேண்டும்.
கொடியேற்றும்போது செய்யக் கூடாதவை:
சேதமடைந்த, கிழிந்த தேசியக் கொடியை ஏற்றக் கூடாது.
ஒரே கொடிக்கம்பத்தில் மற்ற கொடிகளுடன் இணைத்து தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது.
ஆடைகளில் தேசியக் கொடியைக் குத்திக் கொள்ளலாம் என்றாலும், இடுப்புக்குக் கீழான ஆடைப் பகுதிகளில் கொடியைக் குத்தக் கூடாது.
கைக்குட்டைகள், தலையணைகள் உள்ளிட்டவற்றில் தேசியக்கொடியை அச்சிடக் கூடாது.
தேசியக் கொடி எப்போதும் தரையில் படக் கூடாது. நீரில் மிதக்கவிடக் கூடாது.
தேசியக் கொடியைத் திரைச் சீலையைப் போல் பயன்படுத்தக் கூடாது.
தேசியக் கொடியில் எந்தவித எழுத்துகளையும் அச்சிடவோ எழுதவோ கூடாது.
கொடியைப் பயன்படுத்திய பிறகு…
துணியாலான கொடிகளை நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தலாம் என்பதால், அவற்றுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தேசியக் கொடி சேதமடைந்துவிட்டால், பொதுவெளியில் இல்லாமல் தனித்த இடத்தில் அதை எரித்துவிடலாம். கொடிக்கு அவமரியாதை அளிக்காத வகையில் அதை அகற்றிவிடலாம்.
காகிதத்தினால் ஆன கொடிகளைத் தரையில் வீசக் கூடாது. அவற்றைத் தனித்த இடத்தில் உரிய மரியாதையுடன் அகற்ற வேண்டும்.
நெகிழியால் உருவாக்கப்பட்ட தேசியக்கொடிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கடன் வசூலிக்க கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கி!