2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (அக்டோபர் 1) நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கான 5ஜி சேவை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் 13 முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதில் 1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கியது. 5ஜி இணையத்தின் வேகம் நொடிக்கு 10 ஜிபி என்ற அளவில் இருக்கும் என்று டெலிகாம் நிறுவனங்கள் தெரிவித்தன.
ஏர்டெல் நிறுவனம் முதற்கட்டமாக, 5ஜி சேவையை எட்டு நகரங்களில் வழங்க உள்ளது.
அதன்படி டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூர் போன்ற பகுதிகளில் 5ஜி சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
மார்ச் 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் என்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசும்போது, “இந்த மாதத்திற்குள் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும். உலகிலேயே குறைந்த விலையில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
வோடபோன் ஐடியா நிறுவனமும், 5ஜி சேவையை விரைவில் தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
செல்வம்
அதிமுகவில் யாரையும் நான் பிரித்து பார்க்கவில்லை – சசிகலா
மனிதச் சங்கிலி : உயர் நீதிமன்றத்தில் முறையீடு!