இந்தியாவின் சர்கம் கவுஷல் 2022 ஆம் ஆண்டிற்கான திருமதி உலக அழகி பட்டத்தை பெற்று 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரீடத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
லாஸ் வேகாஸில் இன்று(டிசம்பர் 18) திருமதி உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நடந்தது. 63 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா சார்பில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கவுஷல் பங்கேற்றார்.
இதில் திருமதி பாலினேஷியா முதல் ரன்னர்-அப் ஆகவும், திருமதி கனடா இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியாவைச் சேர்ந்த சர்கம் கவுஷல் 2022 ஆம் ஆண்டிற்கான திருமதி உலக அழகி பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இந்தச் செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த திருமதி உலக அழகிப் போட்டியின் இந்தியா நிர்வாக அமைப்பு, “நீண்ட காத்திருப்பு முடிந்துவிட்டது, 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரீடம் கிடைத்துள்ளது!” என்று தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சர்கம் கவுஷல், பட்டத்தை வென்றதில் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார் என்பதை விவரிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரீடம் கிடைத்துள்ளது. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். லவ் யூ இந்தியா, லவ் யூ வேர்ல்ட்,” என்று புதிதாக முடிசூட்டப்பட்ட மிஸஸ் வேர்ல்ட் கூறியுள்ளார்.
சர்கம் கவுஷல் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் முன்பு விசாகப்பட்டினத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார், மேலும் அவரது கணவர் இந்திய கடற்படையில் பணிபுரிகிறார்.
திருமணமான பெண்களுக்கான முதல் அழகிப் போட்டி 1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில், இந்த போட்டியானது உலகின் திருமதி அழகிய பெண் என்று பெயரிடப்பட்டது. 1988 இல் தான் திருமதி உலக அழகி என்று பெயரிடப்பட்டது. இந்தப் போட்டியில் இதுவரை அமெரிக்கா தான் அதிகமுறை கிரீடத்தை சூடியிருக்கிறது.
2001 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் கிரீடத்தை வென்றதன் மூலம், இந்தியா ஒரு முறை மட்டுமே திருமதி உலக பட்டத்தை வென்றுள்ளது. டாக்டர் கோவித்ரிகர் இப்போது 2022-2023 திருமதி உலக அழகிப் போட்டியின் நடுவராக உள்ளார்.
கலை.ரா