பெங்களூருவில் மெட்ரோ தூண் இடிந்து சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகனும் இன்று(ஜனவரி 10) பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பெங்களூரு வெளிவட்டச் சாலையின் நாகவாரா கோட்டத்தில் மெட்ரோ பாலத்திற்கான தூண்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை 10.30மணியளவில் லோஹித் என்பவர் தனது மனைவி தேஜஸ்வினி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் நாகவார பாதையில் இருந்த சுமார் 40 அடி உயரம் கொண்ட மெட்ரோ இரும்பு தூண் சரிந்தது. இதில் லோஹித் மற்றும் அவரது மகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், தேஜஸ்வினி மற்றும் அவரது மகன் விஹான் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக இருவரும் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் காலை 11மணியளவில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
28வயதான தேஜஸ்வினி அதிக உள் இரத்தப்போக்கு காரணமாக இறந்தார். அவரது 4 வயது மகன் விஹான் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “நாங்கள் இடிபாடுகள் மற்றும் தடுப்புகளை அகற்ற உதவுமாறு அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம், ஆனால் யாரும் எங்களுக்கு உதவவில்லை.
பின்னர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் விபத்தில் சிக்கிய நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்,” என்று கூறினார்.
இந்த விபத்தினை அடுத்து பெங்களூரு சிட்டி மாநகராட்சிக்கு (பிபிஎம்பி) எதிராக அப்பகுதியில் உள்ள உள்ளூர் மற்றும் பயணிகளும் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ், ’ஆளும் பாஜக அரசு, மக்களின் வளர்ச்சிப் பணிகளில் ஊழலில் ஈடுபட்டதன் விளைவு’ என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ”இது ‘40 சதவீதம் கமிஷன்’ வாங்கும் பாஜக அரசாங்கம் நிகழ்த்திய படுகொலை. வளர்ச்சிப் பணிகளில் தரம் இல்லை” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, மெட்ரோ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மேலும் “இது குறித்து எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது, நாங்கள் விசாரணை நடத்துவோம். தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து இழப்பீடு வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ், உயிரிழந்த குடும்பத்திற்கு ₹ 20லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகனும் இறந்த சம்பவம் பெங்களூருவின் நாகவார பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்கர் விருது : இன்ப அதிர்ச்சி கொடுத்த காந்தாரா
அதிமுக விதிகள் சொல்வது என்ன? – நீதிபதிகளிடம் ஈபிஎஸ் விளக்கம்!