“ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில் குஜராத் மோர்பி பாலம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது எப்படி” என குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இதில் சத் பூஜையை முன்னிட்டு வழிபடுவதற்காக அப்பாலத்தில் சென்ற 500க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர்.
இந்த விபத்தில் 141 பேர் சிக்கி உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக பாலத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற ஒரேவா குழுமத்தின் 9 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து குஜராத் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த விபத்து குறித்து விளக்கமளிக்குமாறு, மாநில அரசு, மோா்பி நகராட்சி, நகா்ப்புற வளா்ச்சிக் குழுமம், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 15ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மோா்பி நகராட்சி சாா்பில் நேற்று (நவம்பர் 16) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘மோா்பி தொங்கு பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், அதனை சரிசெய்யும் வகையில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்கான வரைவு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு அந்தப் பாலத்தை பராமரித்து வரும் அஜந்தா நிறுவனம் சாா்பில் மோா்பி நகராட்சிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பா் 29ஆம் தேதி தகவல் அளிக்கப்பட்டது.
அதன்படி, தொங்கு பாலத்தை 15 ஆண்டுகளுக்கு முழுமையாகப் பராமரித்து நிா்வகிப்பதற்கான ஒப்பந்தம் அஜந்தா நிறுவனத்துக்கும், மோா்பி நகராட்சி தலைமை அதிகாரிக்கும் இடையே கடந்த மாா்ச் 8ஆம் தேதி போடப்பட்டது.
அந்த வகையில், கடந்த மாா்ச் 8ஆம் தேதிமுதல் அக்டோபா் 25ஆம் தேதி வரை பாலம் பொதுமக்கள் அனுமதிக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், நகராட்சியின் முன்அனுமதி பெறாமல் கடந்த அக்டோபா் 26ஆம் தேதி பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அஜந்தா நிறுவனம் திறந்துவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமாா், நீதிபதி அசுதோஷ் சாஸ்திரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி சாா்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவாங் வியாஸ், ‘பாலம் அக்டோபா் 25ஆம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டிருக்கக் கூடாது’ என்றாா்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘ஒப்புதல் அளிக்கப்படாத நிலையிலும், அஜந்தா நிறுவனம் பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து பதில் மனுவில் மோா்பி நகராட்சி தெளிவாக குறிப்பிட வேண்டும்’ என்றதுடன், அடுத்த விசாரணையின்போது மோா்பி நகராட்சி பொறுப்பு அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் குஜராத் நீதிமன்ற நீதிபதி நிகில் காரியெலை பாட்னாவுக்கு இடமாற்ற வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிபதி நிகில் காரியெல்லை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து குஜராத் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த்குமாரை சந்தித்து முறையீடு செய்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
சபரிமலையில் பெண்கள் : பின்வாங்கிய கேரள அரசு!
பிசாசு போல வளர்கிறது பிஜேபி: திமுகவினருக்கு துரைமுருகன் எச்சரிக்கை!