morbi bridge collapse investigation report

விபத்திற்கு முன்பே சேதமடைந்திருந்த மோர்பி பாலம்: விசாரணை அறிக்கையில் பகீர்!

இந்தியா

குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம், கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இதில் சத் பூஜையை முன்னிட்டு வழிபடுவதற்காக அப்பாலத்தில் சென்ற 300-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர். மறு சீரமைப்பிற்கு பிறகு பாலம் திறக்கப்பட்ட 4 நாட்களில் இந்த விபத்து ஏற்பட்டது பெறும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் 135 பேர் சிக்கி உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாகப் பாலத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற ஒரேவா குழுமத்தின் 10 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

மோர்பி பாலம் அறுந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது குஜராத் அரசு. ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால், ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி, மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையின் செயலாளர், தலைமைப் பொறியாளர் மற்றும் கட்டமைப்பு பொறியியல் பேராசிரியர் ஆகியோர் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.

அதனடிப்படையில் விசாரணை நடத்தி சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை குஜராத் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, மோர்பி நகராட்சியுடன் சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது.

அந்த அறிக்கையில், பாலத்தின் பழுது, பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் பல குறைபாடுகள் இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

1887ஆம் ஆண்டு மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு முக்கிய கேபிள்களில், ஒரு கேபிள் அரிப்பில் பழுதடைந்திருந்ததாகவும், அக்டோபரில் கேபிள் துண்டிக்கப்படுவதற்கு முன்பே அதன் கம்பிகளில் கிட்டத்தட்டப் பாதி ஏற்கனவே உடைந்திருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேபிளில் இருந்த 49 கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்து இருந்ததாகவும் அவை விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே அறுந்திருக்க வாய்ப்புள்ளது. மீதமுள்ள 27 கம்பிகள் விபத்தின் போது அறுந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் சீரமைப்பு பணியின் போது பழைய சஸ்பெண்டர்கள், அதாவது பாலத்தின் நடைபாதையுடன் கேபிளை இணைக்கும் கம்பிகள் புதுப்பிக்கப்படாமல் வெல்டிங் மெஷினை வைத்து ஒட்டவைக்கப்பட்டுள்ளது.

மோர்பி நகராட்சி, பொது வாரியத்தின் அனுமதியின்றி பாலத்தைப் பராமரிக்கவும் இயக்கவும் ஓரேவா நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை வழங்கியது. மேலும் 2022 மார்ச் மாதத்தில் சீரமைப்பு பணிக்காகப் பாலத்தை மூடிவிட்டு அக்டோபர் 26 ஆம் தேதி முன் அனுமதி மற்றும் ஆய்வு ஏதுமின்றி பாலத்தைத் திறந்து வைத்தது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையின் படி ”பாலம் இடிந்து விழும் போது கிட்டத்தட்ட 300 பேர் பாலத்தில் இருந்துள்ளனர். இது பாலத்தின் சுமை தாங்கும் திறனை விடப் பல மடங்கு அதிகம்.

மரப்பலகைகளுக்கு பதிலாக அலுமினிய பேனல்களை மாற்றியதும் பாலம் அறுந்து விழுந்ததற்கு ஒரு காரணம். பாலத்தின் நடைபாதை தளர்வான மரப்பலகைகளுக்குப் பதிலாகத் திடமான அலுமினிய பேனல்களால் சீரமைக்கப்பட்டது. புதுப்பிக்கப்படுவதற்கு முன்பு இருந்ததை போல தனித்தனி மரப் பலகைகள் இருந்திருந்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.

மேலும் பாலத்தைத் திறப்பதற்கு முன்பு சுமை சோதனை மற்றும் கட்டமைப்பு சோதனை நடத்தப்படவில்லை. அலுமினிய பேனல்களின் இடையில் இடைவெளி ஏதுமில்லாமல் பொருத்தப்பட்டிருந்தன. இது பாலத்தின் இயல்புத் தன்மையை விட குறைந்த நெகிழ்வுத்தன்மையை உருவாக்கியது.

அலுமினியத்தைப் பயன்படுத்தியதால் பாலத்தின் ஒட்டுமொத்த எடையும் அதிகரித்திருக்கலாம்” என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை கூறுகிறது.

மோனிஷா

வில் அம்பு சின்னம்: உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.