மோர்பி தொங்குபாலம் விபத்து தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இதில் சத் பூஜையை முன்னிட்டு வழிபடுவதற்காக அப்பாலத்தில் சென்ற 500க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர்.
இந்த விபத்தில் 141 பேர் சிக்கி உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக பாலத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற ஒரேவா குழுமத்தின் 9 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த விபத்து குறித்து குஜராத் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், மோா்பி பாலம் விபத்து தொடா்பாக சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு உள்பட இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு நேற்று (நவம்பர் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, விபத்தை ‘மிகப்பெரிய சோகநிகழ்வு’ எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை குஜராத் உயா்நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வருவதால், தற்போது இந்த மனுக்களை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தனா்.
அதே வேளையில், மோா்பி தொங்கு பாலம் விபத்து தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோரிக்கைகளை குஜராத் உயா்நீதிமன்றத்தில் முறையிடுமாறும் அங்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனில் உச்சநீதிமன்றத்தை நாடுமாறும் மனுதாரா்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெ.பிரகாஷ்