பாலம் அறுந்து விழுந்து 141பேர் உயிரிழந்த வழக்கில் மோர்பி நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் மச்சு ஆற்றுக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து கடந்த 30ஆம் தேதி 141பேர் உயிரிழந்தனர்.
அதிலும் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட அடுத்த ஐந்து நாட்களில் இந்த விபத்து ஏற்பட்டதால் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
கடிகாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்குப் பாலத்தை பராமரிக்கும் பணி ஏன் கொடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் பாலம் விபத்து தொடர்பாகக் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி அசுத்தோஸ் சாஸ்திரி அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் குஜராத் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நாட்டிலேயே பெரிய மாநிலத்தில் அரசாங்க அமைப்பு செயலிழந்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நோட்டீஸ் அளித்தும் நகராட்சி சார்பில் எந்த அதிகாரிகளும் வராததால், அவர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆஜராகவேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.
பாலத்தைச் சீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை டெண்டர் விடாமல் தனியார் நிறுவனமான ஓரேவா குழுமத்திற்கு ஏன் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, மோர்பி நகராட்சி சார்பில் இவ்வழக்கில் விளக்கம் அளிக்க நவம்பர் 24ஆம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், இன்று மாலை 4.30மணிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒரு லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என்று எச்சரித்தனர்.
மோர்பி பால விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிரியா
“வேட்பாளரை பாஜக கடத்திவிட்டது”: ஆம் ஆத்மி!
விதி மீறிய ஏடிஜிபி வாகனம்: அதிரடி காட்டிய போலீஸ்!