உக்ரைன் போர் மற்றும் ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டு கலகம் குறித்து பிரதமர் மோடி, ரஷ்யாவின் அதிபர் புதினுடன் இன்று (ஜூன் 30) தொலைபேசியில் உரையாடினார்.
உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு போரிட்டு வந்தது. ஆனால் ரஷ்யா ராணுவமே வாக்னர் குழு மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அதன்பேரில் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியது 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட எவ்ஜெனி பிரிகோஷ் தலைமையிலான வாக்னர் குழு.
இதற்கிடையே பெலாரஸ் நாட்டு அதிபர் லுகா ஷென்கோவின் சமரசத்தை ஏற்று கிளர்ச்சியை கைவிடுவதாக வாக்னர் குழு தலைவர் பிரிகோஷ் அறிவித்தார். அத்துடன் ஒரு வார காலமாக நீடித்த ரஷியா-வாக்னர் குழு இடையேயான பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் உக்ரைனுடான போர் மற்றும் வாக்னர் குழுவை கையாண்ட விதம் குறித்து பிரதமர் மோடி, ரஷ்யாவின் அதிபர் புதினுடன் இன்று தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது, ஒரே வாரத்தில் வாக்னர் குழுவின் கலகத்தை எதிர்த்து ரஷ்யா எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்ததாகவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் மோடியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த உரையாடலில், உக்ரைனுடனான போரில் பிரதமர் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
அத்துடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), ஜி20 மற்றும் பிரிக்ஸ் ஆகியவற்றில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் மோடியும், புதினும் விவாதித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா