ஜனநாயகம் பற்றி சோனியா காந்தி பாஜகவிற்கு பாடம் எடுப்பதா என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ’தி இந்து’ ஆங்கில நாளிதழில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவின் நாடாளுமன்றம், நீதிமன்றம், அரசு இயந்திரம் என அனைத்து அதிகாரங்களையும் தவறாக பயன்படுத்துகிறது என்றும்,
எதிர்க்கட்சிகளை முடக்கும் நடவடிக்கையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி நேற்று கட்டுரை எழுதியிருந்தார்.
அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுகுறித்து கூறும்போது,
“சோனியா காந்தியின் கருத்து பிரதமர் மோடி மீதான வெறுப்புக்கு எடுத்துக்காட்டாகும்.
அரசியல் விளிம்பு நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அக்கட்சியில் உள்ள உட்கட்சி ஜனநாயகத்தைப் பற்றி முதலில் சோனியா காந்தி பேச வேண்டும். அவர் மாய உலகத்தில் இருந்து வெளியேறி கள யாதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் சிறப்பாக உள்ளதால் தான் மக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகம் குறித்து சோனியா காந்தி பாஜகவிற்கு வகுப்பெடுப்பதா? நீதித்துறை சுதந்திரம் பற்றி காங்கிரஸ் கட்சி பேசுவது மாயை போன்று உள்ளது. இந்தியாவில் 1975-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியால் ஜனநாயகம் மரித்துப்போனது.
சில குடும்பங்கள் தங்களை பெருமை மிக்கவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். நாம் நீதிமன்றங்களை மதிக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றங்களை விட தங்களை பெரியவர்களாக கருதுகிறார்கள். அதனால் தான் அவர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சனம் செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அதிகரிக்கும் விமானப் பயணங்கள்: மார்ச் மாதத்தில் 17.31லட்சம் பேர்