மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Breaking Points என்ற யூடியூப் சேனலுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி நேற்று (ஜூன் 12) பேட்டி அளித்துள்ளார்.
அதில் மத்திய பாஜக அரசு தங்கள் நிறுவனத்துக்கும், நிறுவன அதிகாரிகளுக்கும் நெருக்கடி கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போதைய சிஇஓ எலோன் மஸ்க் பதவியேற்பதற்கு முன், டோர்சி பதவிக்காலத்தில் வெளிநாட்டு அரசாங்கங்களின் அழுத்தங்கள் இருந்ததா? அதற்கு உதாரணம் சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு, மத்திய பாஜக அரசு மிரட்டல் கொடுத்ததாக கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடினர். அப்போது விவசாயிகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
இதுதொடர்பாக யூடியூப் சேனலில் பேசியுள்ள டோர்சி, “2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக அரசை விமர்சனம் செய்த கணக்குகளை முடக்க வேண்டும் என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. அவர்களது இந்த கோரிக்கைக்கு ட்விட்டர் இணங்க மறுத்தால் ரெய்டு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினர்.
அதாவது மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் எங்கள் நிறுவன ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் என்றும் இந்திய ட்விட்டர் நிறுவனம் மூடப்படும் என்றும் கூறினர்.
இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் இருந்து இப்படி ஒரு மிரட்டல் வந்தது. விவசாயிகள் போராட்டம் மட்டுமின்றி அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் கணக்கையும் முடக்க இந்தியாவில் இருந்து கோரிக்கை வந்தது” என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,
“அவர் கூறுவது அப்பட்டமான பொய். ட்விட்டர் ஊழியர்கள் யாரும் சோதனைக்கு ஆளாகவில்லை. சிறைக்கும் போகவில்லை. ட்விட்டர் நிறுவனமும் மூடப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் அண்ணாமலை விவகாரம்!
சர்வதேச விருதுகளுடன் வெளியாகும் ’கண்டதை படிக்காதே’!