நிலவின் தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத சாதனையை இந்தியா அடைந்திருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணியை இன்று (ஆகஸ்ட் 23) மாலை 5.44 மணிக்குத் தொடங்கியது. திட்டமிட்டபடியே சரியாக 6.04 மணிக்கு அதாவது சரியாக 15 நிமிடங்களில் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியது இஸ்ரோ.
இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த 4வது நாடு என்ற பெருமையையும், நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
முன்னதாக விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை இஸ்ரோ நேரலையில் ஒளிபரப்பியது. இதனை நாடு முழுவதும் உள்ள ஏராளமானவர்கள் கண்டனர். குறிப்பாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்தபடியே லேண்டர் தரையிறங்குவதை நேரலையில் பார்த்தார்.
லேண்டர் தரையிறங்கிய உடன் பிரதமர் அவரது கையில் வைத்திருந்த தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.
சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நிலவின் தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத சாதனையை இந்தியா அடைந்திருக்கிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடினமான உழைப்பின் மூலமாக தான் அதனை அடைய முடிந்தது. முன்பெல்லாம் குழந்தைகள் நிலா வெகு தூரத்தில் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் இனிமேல் நிலா சுற்றுப்பயணம் என்று சொல்வார்கள்.
இந்த சாதனைக்காக இஸ்ரோவையும் அதன் விஞ்ஞானிகளையும் மனதார வாழ்த்துகிறேன். இந்தியா தற்போது நிலவில் உள்ளது. சந்திரயான் 3 வெற்றிக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறினார்.
நிலவில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கியதற்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா