டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்துள்ளது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 4,089 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார். டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிஷோடியாவும் தோல்வி கண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ‘மோடியால் என்னை தோற்கடிக்கவே முடியாது’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி செயல்வீரர்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க மோடி முயல்கிறார். இப்படித்தான் அவரால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க முடியும். தேர்தல் வழியாக அல்ல. வாழ்க்கைக்கும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிக்க முடியாது. அப்படி, தோற்கடிக்க வேண்டுமென்றால் அவர் இன்னொரு முறை பிறந்து வர வேண்டும்’ என்று பேசியிருந்தார்.
தற்போது, டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ள நிலையில் கெஜ்ரிவாலும் தோற்று நிற்கும் நிலையில், பலரும் அவரின் இந்த பேச்சு அடங்கிய கிளிப்பை வைரலாக்கி வருகின்றனர். வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி அலுவலகம் கொண்டாட்டத்தில் களித்திருக்க, ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் ஈயடிக்க ஆளில்லை.