”முதல் பந்திலேயே அவுட்!” : மதுரை மாணவியை பாராட்டிய பிரதமர்

இந்தியா

பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி ’பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மன அழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குகிறார்.

அந்த வகையில் நடப்பாண்டிற்கான பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி இன்று (ஜனவரி 27) டெல்லியில் உள்ள தல்கடோரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து விண்ணப்பித்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவ – மாணவிகளின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

ஒரு மாணவர், ”என்னுடைய தேர்வு முடிவுகள் சிறப்பாக இல்லாத போது, என் குடும்ப சூழலை எப்படி சமாளிக்க வேண்டும்?” என்று பிரதமரிடம் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ”குடும்பத்தில் எதிர்பார்ப்புகள் என்பது இயல்பானது தான். ஆனால் சமூக அந்தஸ்துக்காக அந்த எதிர்பார்ப்புகள் இருந்தால் ஆரோக்கியமானது அல்ல” என்று கூறினார்.

மற்றொரு மாணவர், “எனது வேலைகள் அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்படி முடிப்பது?” என கேட்டதற்கு பிரதமர், “நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் மிக அவசியமானது. உங்கள் அம்மா எப்படி நேரத்தை பயன்படுத்துகிறார் என்று கவனியுங்கள்.

அதிலிருந்து நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்”. மேலும் மாணவர்களிடம் தாய் பாசம் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து மதுரையை சேர்ந்த அஸ்வினி என்ற மாணவி, ”தேர்வினால் வரும் மன அழுத்தத்தை எவ்வாறு தவிர்ப்பது?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “முதல் பந்திலேயே அஸ்வினி என்னை அவுட்டாக்க பார்க்கிறார். தேர்வில் மாணவர்களிடம் பெற்றோர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இயற்கையானது தான். எதிர்பார்ப்புக்களைப் பற்றி மாணவர்கள் கவலைப்படாமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தேர்வு மதிப்பெண் குறித்த அழுத்தங்களைக் கொடுக்க வேண்டாம். சில மாணவர்கள் தேர்வில் ஏமாற்றுவதற்கு தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் தங்கள் நேரத்தையும் படைப்பாற்றலையும் சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் குறுக்குவழிகளை நாம் ஒருபோதும் தேர்வு செய்யக்கூடாது. உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் மக்கள் சராசரியாக 6 மணி நேரத்தைத் திரையில் செலவிடுகிறார்கள். இது கவலைக்குரிய விஷயம். கடவுள் நமக்கு ஒரு சுதந்திரமான இடத்தையும், அபரிமிதமான ஆற்றலுடன் தனித்துவத்தையும் கொடுத்திருக்கும் போது, ஏன் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.

மோனிஷா

காங்கிரஸுடன் இணைகிறதா மக்கள் நீதி மய்யம்?

டிஜிட்டல் திண்ணை: ஒரு லட்சம் ஓட்டுகள்… எடப்பாடி- செங்கோட்டையன் மாஸ்டர் பிளான்! 

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.