மோட்டோரோலா நிறுவனத்தின் மார்டின் கூப்பர் தான் உலகத்திற்கு முதன் முதலாக 1973-ஆம் ஆண்டு செல்போனை அறிமுகம் செய்து வைத்தார்.
தொண்ணூறுகளின் பிற்பாதியில்தான் இந்தியாவில் செல்போன் அறிமுகம் ஆனது. அதற்குப்பின் வேகமாக வளர்ந்து வந்த செல்போன் தொழில்நுட்பம் இப்போது 5G யில் வந்து நிற்கிறது.
ஆனால் செல்போனை நாம் தலைக்கு அருகில் வைத்து பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைகள் நமது மூளையை பாதிக்கும் என்று பெரும்பான்மை மக்களால் வெகு காலமாய் நம்பப்பட்டு வந்தது. ரேடியோ அலைகள் மூளையில் புற்றுநோயை உண்டாக்கும் என்றும் சொல்லப்பட்டது.
இதை உறுதி செய்வது போல், செல்போன் பயன்பாடு மக்கள் உடல்நலத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்று சில ஆய்வுகள் தெரிவித்தன.
இந்த சூழ்நிலையில், செல்போன் பயன்பாடு மக்களின் உடல்நலத்தை பாதிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (International Agency for Research on Cancer) 2011 ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் செல்போனில் இருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசைகள் மக்களுக்கு புற்றுநோயை உருவாக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் செல்போன்களின் பயன்பாடு புற்றுநோயை உருவாக்குமா இல்லையா என்று இந்த ஆய்வு உறுதிப்படுத்தவில்லை.
இதை உறுதிப்படுத்த உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் மற்றொரு ஆய்வை மேற்கொண்டது. இதில் மொத்தம் 5000 ஆய்வறிக்கைகள் ஆராயப்பட்டது. அதில் 1994 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்ட 63 ஆய்வறிக்கைகள் இறுதியாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு ‘என்வைரான்மென்ட் இன்டர்நேஷ்னல்’ என்ற ஆய்விதழில் நேற்று (செப்டம்பர் 4) வெளியிடப்பட்டது.
அதில், செல்போன் பயன்பாட்டிற்கும் மூளையில் ஏற்படும் புற்றுநோய் அல்லது கழுத்து , தலையின் வேறு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்க்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு மக்களுக்கு நிம்மதி அளித்திருந்தாலும், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், வருங்காலத்தில் மக்கள் உடல்நலத்திற்கு ரேடியோ அலைவரிசைகளால் தீங்கு வரவிடாமல் காப்பது அறிவியல் துறையின் கடமையாகும்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சிகாகோவில் புதிய முதலீடுகளை ஈர்த்த முதல்வர்: எந்த நிறுவனம்? எவ்வளவு கோடி?
தி கோட்: ராஜபாட்டை காட்டிய ‘டபுள் ஆக்ஷன்’ தமிழ் படங்கள்! இரட்டை வேடத்தில் அசத்தும் விஜய்
நடிகர் விஜய் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?