'Sangeetha Kalanidhi' award for singer T.M.Krishna - protest...congratulations...

”இசையில் குறுகிய அரசியலைக் கலக்காதீர்கள்” : டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஸ்டாலின் ஆதரவு!

இந்தியா

கர்நாடக இசைக்கலைஞரான டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி பல்வேறு தளங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அதே சமயம் அவர் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, கர்நாடக இசை உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மியூசிக் அகாடமியின் சார்பில் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் “சங்கீத கலாநிதி” விருதிற்கு இந்த ஆண்டு கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்குப் பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, விசாக ஹரி, சித்ரவீணா ரவிக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கர்நாடக இசை உலகில் பெரும் சேதம் ஏற்படுத்தினார்!

அந்த வகையில், இசைக்கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், “டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞர்களாக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது.

இசை உலகில் மிகவும் போற்றத்தக்க நபர்களான தியாகராஜர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்களை அவமதித்தவர் டி.எம்.கிருஷ்ணா.

கலை, கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என நமது கலாச்சாரத்தை மதிக்கும் சமூகத்தை நாங்கள் நம்புகிறோம். இந்த மாநாட்டில் கலந்துகொண்டால், அது நாம் கொண்ட நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளனர். அதோடு அவர்கள் பெரியார் குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்திருந்தனர்.

விருதை திருப்பி அளிக்கிறேன்!

இவர்களைத் தொடர்ந்து, கர்நாடக இசைக்கலைஞரான சித்ரவீணா ரவிக்கிருஷ்ணன், “டி.எம்.கிருஷ்ணாவிற்குச் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்படுமானால், எனக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு கொடுத்த சங்கீத கலாநிதி விருதை நான் திருப்பி அளிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதுபோன்று மேலும் சில கர்நாடக இசைக்கலைஞர்களும் டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க, அவருக்கு ஆதரவாகவும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டி.எம்.கிருஷ்ணா மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக சென்னை மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி நேற்று விளக்கம் அளித்தார்.

அவதூறாகப் பேசியிருப்பது மிகவும் தவறு!

அதில், “கர்நாடகா இசையில் சிறந்து விளங்கியதற்காக டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட புறம்பான காரணிகள் அவரது தேர்வை பாதிக்கவில்லை.

வரவிருக்கும் மாநாட்டில் ரஞ்சனி, காயத்ரி இருவரும் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவு துரதிர்ஷ்டவசமானது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் விரும்பாத ஓர் இசைக் கலைஞரைக் குறித்து அவர்கள் அவதூறாகப் பேசியிருப்பது மிகவும் தவறு.

எனக்கும், மியூசிக் அகாடமிக்கும் எழுதிய கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது மிகவும் தவறு. உங்கள் கடிதத்தின் பொருளும் அதன் நோக்கமும் மிகவும் கவலை கொள்ளச் செய்கிறது” என்று அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டி.எம்.கிருஷ்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 23) தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தந்தை பெரியாரை வசைபாடுவது நியாயமல்ல!

அதில், “சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா மியூசிக் அகாடெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டி.எம்.கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும், பெண்கள் சரிநிகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதி வழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.

டி.எம்.கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு, உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்!

விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி ஆகியோரும் டி.எம்.கிருஷ்ணாவும் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூ.6.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படை அதிரடி!

GOLD RATE: கொஞ்சமாக விலை குறைந்தது தங்கம்

நடைபயிற்சியில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “”இசையில் குறுகிய அரசியலைக் கலக்காதீர்கள்” : டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஸ்டாலின் ஆதரவு!

  1. அவரு எல்லா இடத்துலயும் பேமஸா இருக்காரே, நம்மள இந்த மைலாப்பூர் தாண்டி ஒருத்தருக்கும் தெரியலயே, நமக்கு சினிமா சான்ஸும் கெடக்கலியெனு பொறாமை, புகைச்சல், எரிச்சல், ஆங்காரம், ஆத்திரம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *