இந்தியா கூட்டணிக்கான விளம்பர தூதராக பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மும்பையில் 2வது நாளாக இன்று (செப்டம்பர் 1) நடைபெற்று வரும் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பாளர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற 28 எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “பாட்னாவில் 19 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து முதல் கூட்டம் நடத்தினோம்.
அதைத்தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் ’இந்தியா’ (I.N.D.I.A) என்று கூட்டணிக்கு பெயர் வைத்தோம்.
தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மும்பையில் நடைபெற்று வரும் இந்த 3வது கூட்டத்தில் 28 கட்சிகளுடன் இணைந்து நாங்கள் வலிமை மிக்க கூட்டணி கட்சி என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம்.
தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக அரசு எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறது என்பதை நாம் அனுதினமும் பார்த்து வருகிறோம்.
அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், தனிப்பட்ட கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் தனது ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை கூற முடியாமல், இந்தியா கூட்டணி குறித்து தான் பேசி வருகிறார்.
இதன்மூலம் இந்தியா கூட்டணிக்கான விளம்பர தூதராக பிரதமரே செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதற்காக கூட்டணியின் சார்பில் அவருக்கு நன்றி.
கடந்த 9 ஆண்டுகளில் பாஜக எந்த சாதனையும் செய்யவில்லை. பாஜகவின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியும் எழுந்துள்ளது.
அதே வேளையில் இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தற்போது மும்பையில் நடைபெற்றுள்ள கூட்டம் இந்தியா கூட்டணியின் திருப்புமுனை கூட்டமாக அமைந்துள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான கவுண்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது.
அண்மையில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலை பாஜக செய்துள்ளதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்க மறுக்கிறார்.
பாஜக ஆட்சியில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் அதிகாரமில்லை. சிபிஐ, அமலாக்கத்துறை எல்லாம் அவர்களின் ஏவல் அமைப்புகளாக செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள அனைவரும் தனித்தனி கட்சியாக இருந்தாலும், இந்தியாவின் மாண்பையும், மதச்சார்பின்மை கொள்கையையும், ஜனநாயம், சமூகநீதியை காப்பாற்றுவதற்காக ஒன்று சேர்ந்துள்ளோம்.
பாஜக அரசுக்கு எதிரான இந்த தேர்தல் போருக்கு மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா