தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்புக்கான சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் சில மாதங்களுக்கு முன் பரவிய குரங்கு அம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தசூழலில் உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர ஆலோசனை கூட்டம் நேற்று (ஜூலை 23) நடைபெற்றது.
இதில் பேசிய அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், “75 நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்த பாதிப்பால் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இந்தியாவை பொறுத்தவரை முதலாவது குரங்கு அம்மை பாதிப்பு, ஜூலை 14ஆம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பதிவானது. இதுவரை கேரளாவில் மூவரும், தலைநகர் டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்படுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 23) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
குரங்கு அம்மை குறித்து ஏற்கெனவே பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா கண்காணிப்பில் இருக்கிறவர்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு விமான நிலையங்களில் வருபவர்களை 2% ரேண்டம் ஆர்டிபிசிஆர் என்கிற வகையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு முகத்திலோ அல்லது முழங்கைக்கு கீழ் எதாவது கொப்புளம் போல் இருந்தால் நேரடியாக ஒவ்வொருவரையும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மையின் பாதிப்பு என்பது 70 நாடுகளுக்கும் மேல் அதிகரித்துள்ளது. எனவே நாங்கள் மீண்டும் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்ளுக்கு நேரில் சென்று அங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும், கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்திவிட்டு வந்திருக்கிறோம். தமிழக – கேரள எல்லை வழியாக வருபவர்களுக்கு முகத்திலோ அல்லது முழங்கைக்கு கீழோ எதாவது கொப்பளம் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் சேட்சுரேஷன் பரிசோதனை செய்யப்படுகிறது.
இன்றுவரை தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
க.சீனிவாசன்