Deep Fake வீடியோக்களை உருவாக்குவோர் மற்றும் பகிரப்படும் தளங்கள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக Deep Fake தொழில்நுட்பத்தை வைத்து வீடியோக்கள், புகைப்படங்களை போலியாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது உண்மை என நம்பி பொதுமக்களும் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்து விடுகின்றனர். அது போலி என கண்டறிவதற்குள்ளேயே ஏராளமான மக்களை அது சென்றடைந்து விடுகிறது.
அந்த வகையில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் என பலரும் இந்த Deep Fake தொழில்நுட்பத்தால் சமீபத்தில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ, புகைப்படங்கள் உருவாக்குவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உச்சகட்டமாக சமீபத்தில் பெண்களுடன் சேர்ந்து கார்பா நடனம் ஆடுவது போல பிரதமர் மோடியின் deep fake வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இந்த deep fake தொழில்நுட்பம் தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக பிரதமர் மோடியும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (நவம்பர் 23) சமூக வலைதள நிறுவனங்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதில், ”Deep Fake வீடியோக்கள் ஜனநாயகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதனை சமாளிக்க விரைவில் புதிய சட்டங்களை அரசு கொண்டு வரும். Deep fake வீடியோக்களை கண்டறிதல், அவை பரவுவதை தடுத்தல், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட முடிவுகளை உறுதியாக பின்பற்ற சமூக வலைதளங்களும் ஒப்புக்கொண்டு இருக்கின்றன.
Deep fake முறையில் போலிகளை உருவாக்கும் படைப்பாளிகள், அவை பகிரப்படும் தளங்கள் ஆகிய இரு தரப்புக்கும் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் நாங்கள் யோசித்து வருகிறோம். Deep fake போன்ற போலிகளுக்கு எதிராக ஒழுங்குமுறை (Regulations) தேவை என்பது தெளிவாக தெரிகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் சமூக வலைதள நிறுவனங்களுடன் இதுகுறித்த அடுத்த சந்திப்பை நடத்த உள்ளோம். Deep Fake வீடியோக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அதில் விவாதிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மஞ்சுளா
’உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ : புதிய திட்டம் அறிமுகம்!
ஷங்கர் மீது கடுப்பான ராம் சரண்: ’கேம் சேஞ்சர்’ நிலைமை என்ன?