இந்தியாவில் பால் உற்பத்தி ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தர பிரதேசம் நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால்வள உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 12 ) தொடங்கி வைத்தார்.
மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி; “இந்தியாவில் 48 ஆண்டுகளுக்கு பின்னர் உலக பால்வள உச்சிமாநாடு நடைபெறுகிறது.
2014 ஆம் ஆண்டு இந்தியாவில் 146 மில்லியின் டன்னாக இருந்த பால் உற்பத்தி, தற்போது 220 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
இந்திய பால் துறை, ஆண்டுதோறும் சுமார் 210 மில்லியன் டன் பால் பொருள்களை உற்பத்தி செய்து, நாட்டில் சுமார் 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பால்வளத் துறை மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளன” என்று கூறினார்.
இந்தியாவில் பால் உற்பத்தி ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த உற்பத்தி உலக அளவில் 2 சதவீதமாக உள்ளது.
சிறிய அளவிலான பால் பண்ணையாளர்களின் கூட்டு முயற்சியால் இந்தியா உலகின் மிகப்பெரிய பால் பொருள்களை உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளது.

பால் வழங்கும் கால்நடைகளின் மிகப்பெரிய தளத்தை இந்தியா உருவாக்கி வருவதாகவும், பால் வளத்துறையுடன் தொடர்புடைய ஒவ்வொரு கால்நடைகளுக்கும் குறியிடப்பட்டு வருவதாகவும்,
கடந்த சில ஆண்டுகளாக, கால்நடைகளுக்கு, கட்டி தோல் நோய் அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும், அவற்றின் உயிரைக் காக்க, உள்நாட்டில், தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்,
2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கறவை மாடுகளுக்கும் நோய் தடுப்பூசி போடப்படும் எனவும்,
பால் வளத்துறையின் ஆற்றல் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல்,
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது என்றும் இந்தியாவின் பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

உலகின் மற்ற வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியாவில் பால் வளத்துறையின் உந்து சக்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர் என்று கூறினார்.
மேலும் , பிளாஸ்டிக், கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என மோடி கூறினார்.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்