அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 18 ஆயிரம் இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர். இவர்களை ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். migrants deports to India via military plane
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். இதனால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள மக்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கு, 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் குஜராத், பஞ்சாப், ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில், முறையான ஆவணங்கள் இல்லாமல் 18 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் பிடிபட்டுள்ளனர். இவர்களை, ராணுவ சரக்கு விமானமான சி -17 விமானத்தில் உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது. முதல் விமானம் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சான் ஆண்டனியோ நகரில் இருந்து அமிர்தரசரஸ் நகருக்கு 205 இந்தியர்களுடன் புறப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வாஷிங்டனில் டிரம்பை சந்தித்து மோடி பேசுகிறார்.
பிரதமர் மோடி வரும் 10,11 ஆம் தேதிகளில் பிரான்சில் நடைபெறும் ஏ.ஐ. சம்மிட் மாநாட்டில் பங்கேற்று விட்டு அங்கிருந்து நேரடியாக வாஷிங்டன் புறப்படுகிறார். இரு நாட்கள் வாஷிங்டனில் தங்கியிருக்கும் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் 13 ஆம் தேதி டிரம்பை சந்திக்கிறார். அன்றைய தினம் இரவு வெள்ளைமாளிகையில் இந்திய பிரதமருக்கு டிரம்ப் விருந்தளிக்கிறார். இந்த சமயங்களில் அமெரிக்காவில் சட்டவிரோமாக குடியேறிய இந்தியர்கள் பற்றி பேச்சுவார்த்தை முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சட்டப்படி அங்கு குடியேறியிருக்க வேண்டும். இல்லையென்றால் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.