மைக்ரோசாப்ட் இயங்குதளம் செயலிகள் மற்றும் சேவைகள் செயலிழப்பு காரணமாக உலகம் முழுவதும் கணினி தொடர்பான பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
விண்டோஸ் ஓஎஸ் கொண்ட லேப்டாப், கணினி பயன்படுத்தும் நிறுவன ஊழியர்கள் இன்று வேலை செய்ய முடியாமல் பிரச்சனையை எதிர்கொண்டனர். அவர்களது கணினி திரை நீல நிறத்தில் மாறி ரீஸ்டார்ட் ஆகி வருகிறது.
அப்படி வரும் நீல நிறத்தில், “ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்” என்று தோன்றுகிறது. உங்கள் கணினியில் எரர் உள்ளது… ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் என்ற செய்தி இடம் பெற்று மீண்டும் மீண்டும் ரீஸ்டார்ட் ஆவதால் ஊழியர்கள் வேலை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட் மென்பொருள் பிரச்சினையால் உலகம் முழுவதும் விமான சேவை, வங்கி சேவை, ஐடி ஊழியர்களின் பணி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, டெல்லி மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் விண்டோஸ் குளறுபடியால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் எடுத்துக் கொடுக்க முடியாத நிலையில், கைகளால் போர்டிங் பாஸ் எழுதிக் கொடுக்கப்படுகிறது.
இதனால் விமானங்கள் புறப்பாடு தாமதம் ஆகிறது. அமெரிக்காவில் டெல்டா, யுனைடைட் உள்ளிட்ட விமானங்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ விமான நிர்வாகங்கள், வழக்கமான நேரத்துக்கு முன்னதாக விமான நிலையத்துக்கு பயணிகள் வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
“இந்த நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. என்ன பிரச்சினை என்று கண்டுபிடித்திருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும்” என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த செயலிழப்பால் அமைச்சரவை தகவல்களை சேமித்து வைத்திருக்கும் என்.ஐ.சி சர்வரில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் விண்டோஸ் 365 கிளவுட் கணினிகளில் கிரவுட் ஸ்ட்ரைக் பால்கான் சென்சார் மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேர் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட் ஸ்ட்ரைக் இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் எங்கெங்கு மழை?
பாஸ்டேக் ஒட்டவில்லையெனில்… வாகன உரிமையாளர்களின் கவனத்துக்கு!