ஊழியர்களுக்கு மெட்டா கொடுத்த அடுத்த ஷாக்!

இந்தியா

மெட்டா நிறுவனம் தனது 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட், ட்விட்டர், டிஸ்னி உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பணி நீக்க நடவடிக்கைகளை கண்காணித்து வரும் Layoffs.fyi என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

மெட்டாவின் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில், மீண்டும் 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா பணி நீக்கம் செய்ய உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெட்டா நிறுவனம் உலகம் முழுவதும் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த நடவடிக்கையானது போதிய வருமானமின்மை, செலவுகள் அதிகரித்ததை தொடர்ந்து எடுக்கப்பட்டதாக மெட்டா தெரிவித்திருந்தது.

இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் கூறும்போது, “பணி நீக்க நடவடிக்கைக்கு நான் முழுவதுமாக பொறுப்பேற்கிறேன். இது அனைவருக்கும் கடினமான காலம் என்பதை நான் அறிவேன். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன். 2023-ஆம் ஆண்டு என்பது மெட்டா நிறுவனத்திற்கு செயல் திறன் ஆண்டாக இருக்கும். இதனால் மெட்டாவின் சில திட்டங்கள் மூடப்படலாம்” என்று தெரிவித்திருந்தார்.

அந்த செய்தியில், கடந்த ஆண்டு மெட்டா ஊழியர்கள் 13 சதவிகிதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை போலவே இந்த ஆண்டு பணி நீக்க நடவடிக்கைகளும் அதே அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி நீக்க நடவடிக்கையானது ஒரே நேரத்தில் இல்லாமல் பல்வேறு சுற்றுகளாக அறிவிக்கப்பட உள்ளது.

முதல் சுற்று பணி நீக்க அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். இதில் பொறியியல் அல்லாத பணியாளர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சில திட்டங்கள் மற்றும் குழுக்கள் மூடப்படும். மேலும் உயர் அதிகாரிகள் சிலருடைய பதவிகள் குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது. என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்க் சக்கர்பெர்க் குறிப்பிட்டபடி இப்போது மெட்டா நிறுவனம் பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

மார்கன் ஸ்டான்லி 2023 தொழில்நுட்ப ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு மாநாட்டில் மெட்டா தலைமை நிதி அதிகாரி சூசன் லி பேசியபோது, ஃபேமிலி ஆஃப் ஆப்ஸ் மற்றும் ரியாலிட்டி லேப்ஸ் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் சில இடங்களில் திட்டப்பணிகளை நிறுத்தவும், சில குழுக்களை மாற்றவும், சில கடினமான முடிவுகளை எடுக்கவும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மெட்டா நிறுவனமானது ப்ளூ டிக் பெறுவதற்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு 11 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.990), ஆப்பிள் ஐபோன் 14 டாலர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இப்படி வருவாய் ஈட்டுவதற்காக புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வரும் மெட்டா, ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

செல்வம்

ஆறறிவுக்கு அன்பல்லோ அழகு !

மதுரை: விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.