மெட்டா நிறுவனம் 2 ஆம் கட்டமாக 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதை உறுதிபடுத்தியுள்ளார் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்.
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளப்பக்கங்களை இயக்கி வரும் மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் (13 சதவீதம்) 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மெட்டா. இந்த நடவடிக்கையானது போதிய வருமானமின்மை, செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக மெட்டா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 2 ஆம் கட்டமாக மேலும் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. முதற்கட்ட பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 4 மாதங்களில் மீண்டும் பணி நீக்கம் குறித்தான அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள மெட்டா ஊழியர்கள் மத்தியில் வேலையிழப்பு அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொருளாதார சரிவால் 2 ஆம் கட்டமாக 10 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் மெட்டா தெரிவித்துள்ளது. இந்த செய்திக்குப் பிறகு மெட்டாவின் பங்குகள் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது குறித்து மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், “இந்த புதிய பொருளாதார யதார்த்தம் மூலமாக பல ஆண்டுகளாகத் தொடரும் சாத்தியக்கூறுகளுக்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், தற்போது பணியில் இருக்கும் 10 ஆயிரம் ஊழியர்களின் பணியிடங்கள் மற்றும் காலியாக இருக்கும் 5 ஆயிரம் வேலைவாய்ப்புகள் முழுமையாக நீக்கப்படுகிறது. இந்த பணிநீக்க நடவடிக்கைகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறிவிக்கப்படும். மேலும் சில சந்தர்ப்பங்களில் பணி நீக்கம் ஆண்டின் இறுதி வரை தொடரும்” என்று ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு குழுவின் அளவை மேலும் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் குழுவில் மறுசீரமைப்பு ஏப்ரல் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் மற்றும் வணிகக் குழுக்களுக்கான பணிநீக்கம் மே மாதத்தில் வரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டை திறமையின் ஆண்டாக மாற்றுவதாக ஜுக்கர்பெர்க் உறுதியளித்துள்ளார். சமீபத்திய நடவடிக்கையின் மூலம் மெட்டாவின் செலவுகள் $86 பில்லியனுக்கும் $92 பில்லியனுக்கும் இடையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்பு கணிக்கப்பட்ட $89 பில்லியன் முதல் $95 பில்லியனை விடக் குறைவாகும்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொழில்நுட்பத்துறை கிட்டத்தட்ட 2,90,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 40 சதவீதம் ஊழியர்கள் இந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று பணிநீக்க நடவடிக்கைகளின் கண்காணிப்பு தளமான layoffs.fyi தெரிவித்துள்ளது.
மோனிஷா
வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர்!
திமுகவுக்கு ரூ.400 கோடி – எனக்கு ஃப்ரீ: பிரஷாந்த் கிஷோருக்கு நன்றி சொன்ன சீமான்