ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ‘த்ரெட்ஸ்’ என்ற செயலி இன்று (ஜூலை 6) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக ட்விட்டர் இருந்து வருகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு என உலகில் நடக்கும் ஒவ்வொரு நகர்வுகள் குறித்தும் உடனடியாக இதில் பதிவிடப்படுகிறது.
எனவே தலைவர்கள் முதல் சாமானியர் வரை உலகம் முழுவதும் சுமார் 55 கோடிக்கும் அதிகமானோர் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) விலைக்கு கடந்தாண்டு அக்டோபரில் வாங்கினார்.
அன்று முதல் தினமும் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்த வண்ணம் இருக்கிறார்.
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருக்க கட்டணம், நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் தனிநபர்களுக்கு நீல நிற டிக்,
ட்விட்டர் லோகோ மாற்றம் மீண்டும் பழைய லோகோவையே கொண்டுவந்தது இப்படியான எலான் மஸ்க்கின் தொடர் செயல்பாடுகள் ஒரு கட்டத்தில் ட்விட்டர் வாடிக்கையாளர்களை கடுப்பாக்கியது.
இதனிடையே ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்கப்போவதாக மெட்டா நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
மேலும், இது தொடர்பாக மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், ” இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை எடுத்து உங்கள் மனதில் உள்ளதைப் பற்றி விவாதிப்பதற்கான புதிய அனுபவத்தை உருவாக்குவதே எங்கள் பார்வை.
இது போன்ற நட்பு உலகிற்குத் தேவை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
இந்நிலையில் தான் மெட்டா நிறுவனம் ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் ‘த்ரெட்ஸ்’ செயலியை இன்று (ஜூலை 6) அறிமுகம் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து இதில் லாக் இன் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் மெட்டா நிறுவன சிஇஓ மார்க், எலான் மஸ்க்கை கிண்டலடிக்கும் வண்ணம் இன்ஸ்டாகிராம் த்ரெட்ஸ் ஐ அறிமுகப்படுத்திய கையோடு ஒரு ட்விட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளர். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நில அபகரிப்பு வழக்கு: பொன்முடி விடுதலை!
உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயமில்லை: யுஜிசி அறிவிப்பு!