அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், விரைவில் பதவியேற்கவுள்ளார்.
இதற்கிடையே, டிரம்ப் சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு, பதிலளித்தார்.
அப்போது அவர், சில அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் பிரேசிலும் இருப்பதாகவும் இதனால் இந்தியாவுக்கு எதிரான வரியானது உயர்த்தப்படும் என்று மறைமுகமாக எச்சரித்தார்.
இப்போது, இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கு முன்னரே தற்போது கனடாவையும் அவர் வம்புக்கு இழுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியில் இருந்த போது தான் சாந்தமாக இருந்ததாகவும் இனிமேல் உக்கிரமாக இருக்கப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சோசியல் மீடியாவில் சில சர்ச்சை கருத்துக்களை டிரம்ப் பதிவிட்டுள்ளார். ‘அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா மாற வேண்டுமென்பது எனது ஆசை. பெரும்பாலான கனடியர்களின் ஆசையும் அதுதான்.
அப்படி ஒன்று நடந்தால் அது மிகச்சிறந்த ஐடியாவாக இருக்கும். இது கனடிய மக்களுக்கு பல விதங்களில் நன்மை பயக்கும். ஜஸ்டின் ரூடோ கனடா மாகாணத்தின் ஆளுநராக தொடரலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றதும் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ அமெரிக்கா சென்று டொனால்ட் டிரம்பை சந்தித்தார்.
இருவரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டனர். பின்னர், அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்த டிரம்ப், ‘கிரேட் கனடா மாகாண ஆளுநருடன் டின்னர் சாப்பிட்டேன். வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்தோம்.
கனடா ஆளுநர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார். அதன் பலன் அனைவருக்கும் கிடைக்கும்’ என்று கேலியாக பதிவிட்டிருந்தார்.
கனடா அமெரிக்காவில் விதிகளுக்கு புறம்பாக குடியேறுபவர்கள், போதை கடத்தலை தடுக்கவில்லையென்றால், அந்த நாட்டு பொருள்களுக்கு 25 சதவிகித வரி விதிக்க போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அப்படி, வேண்டாமென்றால் அமெரிக்காவின் மாகாணமாக மாறி விடுங்கள் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கலாமா? என்ற வாக்கெடுப்பு கனட மக்களிடத்தில் நடத்தப்பட்டது. அதில், 13 சதவிகிதம் பேர் ஆதரவளித்திருந்தனர். இந்த வாக்கெடுப்பு கொடுத்த தெம்பினால் டிரம்ப் இப்படியெல்லாம் பேச தொடங்கியிருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளையில் , டிரம்பின் பேச்சை காமெடியாக பார்க்கவில்லை. அவமானகரமாக பார்க்கிறோம். எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் இணைய முடியாது. எங்களை வலிமையை காட்டியும் இணைத்துக் கொள்ள முடியாது என்று கனடா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
அடுத்த ஏழு தினங்களுக்கு… வானிலை மையம் வார்னிங்!
அமைதியோ அமைதி… ஆழ்ந்த உறக்கத்தில் பழனிசாமி : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!