மணீஷ் சிசோடியாவின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Kavi

சிபிஐயால் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று(பிப்ரவரி 28) உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மதுபான கொள்கை ஊழல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டார்.

இதையடுத்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

அதன்படி கடந்த 26ஆம்தேதி ஆஜரான மணீஷ் சிசோடியாவிடம் 8மணி நேரம் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். வரும் 4ஆம் தேதி வரை சிசோடியாவை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.

இந்நிலையில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் இன்று(பிப்ரவரி 28) மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மணீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் சிங்வி கோரிக்கை வைத்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், முதலில் உயர் நீதிமன்றத்தை நாடாமல் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கைச் சுட்டிக்காட்டினார்.

பின்னர் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், பிற்பகல் 3.50 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நேரடியாக நாடினார் வினோத் துவா. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

ஆண்களும் பெண்களும் சமம் கிடையாது: சதீஷ்

மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் 236 கோடி பயணங்கள்: முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share