டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று (பிப்ரவரி 26) ஆஜராகியுள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி நிர்வாகிகள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா கடந்த ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. இது தொடர்பான குற்றப்பத்திரிக்கை 3 மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதமும் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்த சோதனைக்குப் பிறகு மணீஷ் சிசோடியா பிப்ரவரி 19 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் டெல்லி அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தயாரித்து வருவதால் விசாரணைக்கு ஆஜராவதற்கு ஒரு வாரக் காலம் அவகாசம் கேட்டார். மேலும் விசாரணைக்கு எப்போதும் ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் குரானா எதிர்ப்பு தெரிவித்து மணீஷ் கோரிக்கையை நிராகரிக்குமாறு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் மணீஷ் கோரிக்கையை ஏற்ற சிபிஐ இன்று (பிப்ரவரி 26) ஆஜராக அனுமதி வழங்கியது. அதன்படி இன்று (பிப்ரவரி 26) டெல்லி லோதி சாலையில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகத்தில் மணீஷ் சிசோடியா விசாரணைக்காக ஆஜரானார்.
இன்று மாலை 6 மணி வரை அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைக்குப் பிறகு மணீஷ் சிசோடியா கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு மணீஷ் சிசோடியா டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தி விட்டு, ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக திறந்த காரில் சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றார் மணீஷ்.
அப்போது பேசிய அவர், “நான் 7அல்லது 8 மாதங்கள் சிறையில் இருந்தால் அதற்காக வருத்தப்படமாட்டேன், பெருமைப்படுவேன். பிரதமர் நரேந்திர மோடி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்துப் பயந்துவிட்டார். அதனால், என்னை பொய் வழக்கில் சிக்க வைக்கப்பார்க்கிறார்.

முதல் நாளிலிருந்து எனக்கு துணையாக இருந்த எனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தனியாக இருக்கிறார். அவரை கவனித்துக் கொள்ளுங்கள். டெல்லியில் இருக்கும் குழந்தைகள் பெற்றோர்களின் சொற்படி நடந்து கொள்வதோடு நன்றாகப் படிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
முன்னதாக மணீஷ் சிசோடியா சிபிஐ விசாரணைக்குச் செல்வது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ”கடவுள் உங்களுடன் இருக்கிறார் மணீஷ். லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் ஆசீர்வாதங்கள் உங்களுடன் இருக்கின்றது.
நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும் நீங்கள் சிறைக்குச் செல்வது சாபமல்ல, பெருமை. நீங்கள் விரைவில் சிறையில் இருந்து திரும்புவதற்கு நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் நாங்கள் அனைவரும் உங்களுக்காகக் காத்திருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணீஷ் சிசோடியா தற்போது தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதால் முக்கியமான ஆம் ஆத்மி நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிபிஐ அலுவலகம், மணீஷ் சிசோடியா வீடு ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இதனால் டெல்லி அரசியலில் காலை முதல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மோனிஷா