மணிப்பூரில் குகி என்ற பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்துள்ளது.
ஆண்கள் சுற்றியிருக்க அந்த பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டையே உலுக்கியிருக்கிற இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
வீடியோவில், ஏராளமான ஆண்கள் சூழ்ந்து அணிவகுத்து வர இரு பெண்கள் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக இழுத்து வரப்படுகின்றனர். பெண்களின் பிறப்புறுப்பு, மார்புகளில் கைவைத்து இழுத்து வருகின்றனர் அந்த வக்கிரபுத்தி கொண்ட ஆண்கள். இது பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது.
கடந்த மே 3ஆம் தேதி மணிப்பூரில் கலவரம் வெடித்த அடுத்த நாளே இப்படி ஒரு கேவலமான, இந்தியாவே தலைகுனியும் வகையிலான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
மே 18ஆம் தேதி ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று வீடியோ வெளியான பிறகும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய பிறகும்,
பிரதமர் மோடி, மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது’ என சொன்ன பிறகும், நாட்டில் உள்ள அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்கள் தலையிட்ட பிறகும், தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பிறகும், இன்று ஒரே நாளில் குற்றவாளிகளை தேடிய மாநில காவல் துறை அதில் ஒருவரை கைது செய்திருக்கிறது.
அந்த பெண்களை இழுத்துச் சென்றவர்களில் பச்சை சட்டை அணிந்திருந்த நபர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் ஹுரெம் ஹீரோடஸ் மெய்தி என்பதும், வயது 32 வயது என்பதும், இவரது தந்தை ஹெச். ராஜென் மெய்தி என்பதும் தெரிய வந்துள்ளது.
என்ன நடந்தது?
குகி சமூகத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தி ஸ்க்ரால் ஊடகத்துக்கு கூறுகையில், ‘மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட ஒரு நாளுக்கு பிறகு காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நாங்கள் வசித்து வந்த பி பைனோம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
எங்கள் கிராமத்துக்குள் புகுந்து மெய்தி சமூகத்தைச் சேர்ந்த கும்பல் வீடுகளுக்கு தீ வைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதுடன், உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்த மண் பாதையில் தப்பித்து காட்டுப்பகுதியில் ஓடினோம்.
ஆனால் அந்த கும்பல் எங்களை கண்டுபிடித்துவிட்டது. எங்கள் பக்கத்து வீட்டுக்காரரையும் அவரது மகனையும் சிறிது தூரம் அழைத்துச் சென்று கொன்றுவிட்டனர்.
பின்னர் அந்த கும்பல் பெண்களை தாக்கத் தொடங்கியது. பெண்களை பார்த்து, ‘உங்களது ஆடைகளைக் கழற்றுங்கள்’ என்று மிரட்டினார்கள்.
அப்போது அவர்களை எதிர்த்து, நாங்கள் கழட்டமாட்டோம் என்று கூறிய போது, என்னைப் பார்த்து அந்த கும்பல், “இப்போது நீ ஆடையை கழற்றவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவோம்’ என கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் உயிர் பயத்தில் ஒவ்வொரு ஆடையாக கழற்றினேன். அப்போது அங்கிருந்த ஆண்கள் கன்னத்தில் அறைந்து தாக்கினர்.
தொடர்ந்து என்னை சாலை அருகே இருந்த ஒரு நெல் வயலுக்கு இழுத்துச் சென்றனர். அங்கு வைத்து, என்னை படுக்குமாறு கத்தினர். உயிருக்கு அஞ்சி அவர்கள் சொன்னதை நான் கேட்டேன். மூன்று ஆண்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர், ’இவளை பாலியல் பலாத்காரம் செய்வோம்’ என கூறினார்.
ஆனால் என்னை அடித்து துன்புறுத்திய அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனினும் மார்பகங்களை பிடித்து கசக்கி துன்புறுத்தினர்.
என்னைபோன்று 21 வயது மதிக்கத்தக்க என் பக்கத்துவீட்டுக்கார பெண்ணையும் ஒரு கும்பல் இழுத்துச் சென்றது. அவரை சிறிது தூரம் தள்ளி இழுத்துச் சென்றதால் அவருக்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை” என்று தனக்கு நேர்ந்த கொடூரத்தை மன வேதனையுடன் கூறியுள்ளார்.
வேடிக்கை பார்த்த போலீசார்
தி வயருக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “இந்த சம்பவம் நடந்த போது அந்த இடத்தில் போலீசாரும் இருந்தனர். ஒரு காரில் 4 போலீசார் அமர்ந்துகொண்டு வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
போலீஸ் வழக்கு -ஜீரோ எப்.ஐ.ஆர் என்றால் என்ன?
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உறவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி மே 18 அன்று காங்போக்பி மாவட்டத்தின் சைகுல் காவல் நிலையத்தில் ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
ஜீரோ எப்.ஐ.ஆர். என்பது குற்றம் எந்த இடத்தில் நடந்திருப்பினும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம். பின்னர் அதை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். இதுதான் ஜீரோ எப்.ஐ.ஆர் ஆகும்.
இந்நிலையில் பெண்கள் வன்கொடுமை விவகாரத்தில் முதலில் எப்.ஐ.ஆர் பதிவு செய்த சைகுல் காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், “அடையாளம் தெரியாத 800-1000 பேர் மீது பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.
சைகுல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், “எங்கள் கிராமத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஏகே ரைபிள்ஸ், எஸ்எல்ஆர், 303 ரைபிள்கள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர்.
அந்த கும்பல் கிராமத்தில் உள்ள வீடுகளை தீ வைத்து சேதப்படுத்தியது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஐந்து பேர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள “காடுகளை நோக்கி” ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களில் இரண்டு பேர் ஆண்கள், மூன்று பேர் பெண்கள்.
இதில் 56 வயது மதிக்கத்தக்க ஆண், அவரது 19 வயது மகன், 21 வயது மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இவர்களைத் தவிர 42 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 52 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இருந்தனர்.
இவர்கள் காட்டு வழியே தப்பித்து ஓடிக்கொண்டிருக்கும் போது வன்முறை கும்பல் ஒரு ஆணை கொன்றது. அப்போதுதான் 3 பெண்களையும் அந்த கும்பல் ஆடைகளை கழற்ற சொல்லி துன்புறுத்தியது.
இதில் 21 வயது பெண், அந்த கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்டார். மற்ற இரண்டு பெண்களும், தங்களுக்கு தெரிந்த சிலரது உதவியுடன் தப்பிக்க முடிந்தது.
அந்த 21 வயது இளம்பெண்ணை அவரது சகோதரர் காப்பாற்ற முயன்ற போது அவரையும் கொன்றது அந்த கும்பல்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மீது சைகுல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். இப்போது நோங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தகவல் இருட்டடிப்பு
மே 4ஆம் தேதி இந்த சம்பவம் நடந்து மே 18ஆம் தேதி எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு 77 நாட்களுக்கு பிறகு இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
மணிப்பூரில் நடந்த வன்முறையால் அங்கு இணைய சேவை முடங்கியிருந்த சூழலில் தற்போதுதான் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
இந்த வீடியோவை வெளியிட்டதற்காக ட்விட்டர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்ததால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், முதன்முறையாக மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலைத்து பிரதமர் மோடியே பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்தவும், மீண்டும் அமைதியை கொண்டு வருவதாகவும் கூறி இணைய சேவையை மாநிலத்தில் மே 3 முதல் முழுமையாக முடக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டது.
எனினும் இந்த இணைய முடக்கம் என்பது வன்முறை குறித்த உண்மை, முக்கியமான தகவல்கள் மற்றும் விவரங்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
இந்தியா என்பது இணைய முடக்கத்தின் தலைநகராக இருப்பதாகவும். 58% இணைய முடக்கம் இந்தியாவிலேயே நடப்பதாகவும் ஸ்டாப் டேட்டாபேஸ் கூறுகிறது.
ஜி20 மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் இந்தியாவில், இப்படி ஒரு நிலை. சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் கூட இந்தியாவில் அதிகளவு இணைய பயன்பாடு முடக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மணிப்பூரில் இப்படி இரு சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
எனவே, இந்த வீடியோ வெளியாகாமல் இருந்திருந்தால், பிரதமர்தான் வாய் திறந்திருப்பாரா? அல்லது காவல் துறைதான் நடவடிக்கை எடுத்திருக்குமா?. ஆரம்பத்தில் இருந்து மணிப்பூரில் ஏற்பட்ட கொடூர நிகழ்வுகளுக்கெல்லாம் யார் பொறுப்பு? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துகொண்டிருக்கின்றன.
இதற்கு உரிய பதில்களை உரியவர்கள் அளிப்பார்களா?
பிரியா
ஓ.பி.ரவிந்திரநாத் வழக்கில் மேல்முறையீடு செய்வோம்: ஓபிஎஸ்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பத்திரப் பதிவு ரத்து: நயினார் பாலாஜி