மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் மே 3-ஆம் தேதி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது இரண்டு சமூக மக்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது.
இந்த வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில் குகி சமுதாயத்தை சேர்ந்த இரண்டு பெண்களை ஆடையின்றி நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவமானது மே 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக தெளபால் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், “மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்த பிறகு மே 4-ஆம் தேதி சுமார் 800-1000 நபர்கள் 303 ரைபில்ஸ் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பி பைனோம் கிராமத்திற்குள் நுழைந்தனர்.
அவர்கள் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அப்போது மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் அருகிலிருந்த காட்டு பகுதிக்குள் தப்பி செல்ல முயன்றுள்ளனர். அவர்களை இடைமறித்து அந்த கும்பல் தாக்கியது. இதில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டு பெண்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். 19 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமரின் அமைதி மற்றும் செயலற்ற தன்மை மணிப்பூரை அராஜத்திற்கு அழைத்து சென்றுள்ளது.
மணிப்பூரில் இந்தியாவின் கருத்தியல் தாக்கப்படும் போது ‘இந்தியா’ கூட்டணி அமைதியாக இருக்காது. மணிப்பூர் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்