மணிப்பூரில் பெண்களுக்கு நடந்ததை போல மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் நடந்தது என்று கூறி நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
ஜூலை 27-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் தாமதிக்காமல் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “வகுப்புவாத மற்றும் மதவெறி வன்முறைகளில் பெண்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறை நடந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. மணிப்பூரில் நடந்ததை மேற்கு வங்கம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் நடக்கிறது என்று கூறி நியாயப்படுத்த முடியாது. அங்கு இன்னும் அமைதி திரும்பாதது அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களுக்கு நடந்த வன்முறை குறித்து பெண் நீதிபதிகள் அடங்கிய சிறப்பு குழு அமைத்து விசாரணை செய்வது தொடர்பாக மத்திய அரசு நாளை கருத்து தெரிவிக்க வேண்டும். கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் கலவரத்தில் எத்தனை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது
மே 4 ஆம் தேதி பாலியல் வன்முறை நடந்துள்ளது, எப்போது அரசு எப்.ஐ.ஆர் பதிவு செய்தது? எத்தனை ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன? பாலியல் வன்முறை குறித்து வழக்குப் பதிவுசெய்ய 18 நாட்கள் தாமதம் ஏன்? அந்த எப்.ஐ.ஆர் களிலும் குற்றவாளிகள் பெயர் எதுவும் இல்லாதது ஏன்? அருகாமை போலீஸ் ஸ்டேஷனுக்கு எந்த தகவலும் தெரியாதா? ஒரு மாதம் கழித்து ஜூன் 18 ஆம் தேதிதான் வழக்கு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த தாமதம் ஏன்? 6000 வழக்குகளில் என்னென்ன வழக்குகள் பதிவாகியுள்ளன? அதன் விபரங்கள் உள்ளதா? இந்த 6000 வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க முடியுமா?பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளதா? ” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்தால் மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை. மணிப்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக 6000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாதம் செய்தார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு நீதிபதி சந்திரசூட் ஒத்திவைத்தார்.
செல்வம்
செப்டம்பர் 15க்கு பிறகு பயிரிடக்கூடாது : நீதிமன்றம் உத்தரவு!
இந்துக்களுக்கு மட்டும் அனுமதி: பதாகையை மீண்டும் வைக்க உத்தரவு!
“ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிடக்கூடாது” : தங்கம் தென்னரசு