மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில் 20 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடியினர் மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தசூழலில், கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள், மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர். அப்போது அங்குள்ள முகாமில் இருந்த ஆறு மெய்தி இன மக்கள் காணாமல் போனதாக போராடி வந்தனர்.
இந்தநிலையில், கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஜிர்பாம் மாவட்டத்தில் உள்ள பராக் நதியில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து மெய்தி இன மக்கள் மணிப்பூர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது பல இடங்களில் கலவரமாக வெடித்தது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள முதல்வர் பிரேன் சிங் வீடு உள்பட பல அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளை குறிவைத்து தாக்கினார்கள். சாலைகளில் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இதனால் மணிப்பூர் மாநிலம் முழுவதும் அசாதாரணமான சூழல் நிலவியது.
கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இம்பால், பிஷ்னுபூர், தெளபால், காக்சிங் உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் பைரன் சிங் தவறிவிட்டதாக குற்றம்சாட்டி மணிப்பூரில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்திருந்த தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
தேசிய மக்கள் கட்சியில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இக்கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதால், மணிப்பூர் பாஜக அரசுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை. பெரும்பான்மைக்கு தேவையான 37 எம்.எல்.ஏ-க்கள் பாஜகவுக்கு இருக்கிறார்கள்.
மணிப்பூர் மாநில பிரச்சனையின் தீவிரத்தைக் கவனத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (நவம்பர் 17) மகராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, டெல்லியில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்றும் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ‘கங்குவா’
ஜவுளித் துறையில் முன்னேறிய மாநிலம் தமிழகம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பெருமிதம்!