மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாநில காவல் துறைக்கும் பல்வேறு கேள்விகளை நேற்று உச்ச நீதிமன்றம் எழுப்பியிருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) பாதிக்கப்பட்ட 2 பெண்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெற தடைவிதித்துள்ளது.
கடந்த மே 3ஆம் தேதி முதல் வன்முறை நடந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நேற்று (ஜூலை 31) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இரு வாரங்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியானது. இப்படி ஒரு சம்பவம் மட்டுமல்ல பல சம்பவங்கள் நடந்திருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.
இந்த சம்பவம் மே 4 ஆம் தேதி நடந்திருக்கிறது. ஆனால் அன்றே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறைக்கு என்ன தடையாக இருந்தது? என்று மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு துஷார் மேத்தா, “மே 18ஆம் தேதி தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதாக போலீசாரின் கவனத்துக்கு வந்திருக்கிறது. வீடியோ வெளியான 24 மணி நேரத்திற்குள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி, “மொத்தமாக மணிப்பூரில் எத்தனை எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று கேள்வி எழுப்ப, குறிப்பிட்ட ஸ்டேஷனில் மட்டும் 20 எப்.ஐ.ஆர்.களும் மாநிலம் முழுவதும் 6,000 எப்.ஐ.ஆர்.களும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று பதிலளித்தார்.
“இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று உள்ளூர் காவல்துறைக்கு தெரியாமல் இருந்தது எப்படி? ஒரு மாதம் கழித்து ஜூன் 20ஆம் தேதி தான் மாஜிஸ்திரேட்டுக்கு எப்.ஐ.ஆர் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த தாமதம் ஏன்?
நீங்கள் 6000 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள். இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனை? கொலை, தீ வைப்பு, வீடுகளை எரித்தல் போன்ற கடுமையான குற்றங்களில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர்? உடல் ரீதியாக துன்புறுத்துதல், சொத்துகளுக்கு எதிரான குற்றங்கள் என்ன? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இது மட்டும்தானா? இதுபோன்ற எத்தனை எஃப்ஐஆர்கள் உள்ளன?. பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரிவுகள் என்ன? அனைத்து வழக்கையும் சிபிஐ விசாரிக்குமா?” என கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு துஷார் மேத்தா, “எஃப்.ஐ.ஆர்.களின் எண்ணிக்கை மற்றும் வழக்கு பிரிவு தொடர்பான குறிப்பிட்ட வழிமுறைகள் தன்னிடம் இல்லை” என்று கூற, ”அரசிடம் உண்மைகள் இல்லை” என்று குறிப்பிட்டார் தலைமை நீதிபதி.
மேலும், “பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசார்தான் தங்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்ததாக வாக்குமூலங்கள் கொடுத்திருக்கிறார்கள். இது ‘நிர்பயா’ போன்று தனிப்பட்ட வழக்கு அல்ல. இது தனி ஒரு நிகழ்வும் அல்ல.
வன்முறை நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இந்த காலக்கட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்ய மனிதாபிமான வழிமுறை தேவை” என்று முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலையை குறிப்பிட்டு கவலை தெரிவித்தார் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.
“6000 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் எத்தனை பூஜ்ஜிய எப்.ஐ.ஆர்.கள் உள்ளன. எத்தனை மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன். நீதிமன்ற காவலில் எத்தனை பேர் இருக்கிறார்கள். எத்தனை பேர் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்?. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட உதவிகள் என்ன? எத்தனை பேரிடம் ‘164 வாக்குமூலங்கள்’ பெறப்பட்டுள்ளன? உள்ளிட்ட விவரங்களை அறிய விரும்புகிறேன்” என்றும் துஷார் மேத்தாவிடம் கேட்டார் தலைமை நீதிபதி.
தொடர்ந்து நீதிபதி ஜெ.பி.பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா, “மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மணிப்பூர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் சிக்கி தவிக்கின்றனர், பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளவும், குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்குவதற்காக அவர்களின் வாக்குமூலங்களை பெறுவதற்கு ஒரு குழுவை உருவாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவிகள் மற்றும் மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு எல்லாம் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட இரு பெண்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.
“மத்திய அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது. இந்த வழக்கை அசாம் மாநிலத்துக்கு மாற்ற உள்ளனர். ஆனால் இந்த இரண்டு நடவடிக்கைகளையும் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்க்கின்றனர்” என்று கூறினார் கபில் சிபல்.
அப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா, “இந்த விசாரணையை மணிப்பூருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்றுதான் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதே தவிர குறிப்பாக அசாமுக்குதான் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை” என்றார்.
அப்போது அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி இந்த வழக்கு விசாரணையை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதாக கூறினார்.
இதையடுத்து வாதாடிய பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “வன்முறை செய்தவர்களுக்குதான் காவல்துறை ஒத்துழைத்திருக்கிறது என்பதை அங்கு நடந்த சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றன. போலீஸ் தான் வன்முறை கூட்டத்துக்குள் பெண்களை அழைத்து சென்று விட்டுள்ளது. அவர்கள் பெண்களை நெல்வயலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். சிஆர்பிசி பிரிவு 161ன் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள் இந்த உண்மையை தெளிவுப்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தை, அவரது மகன் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உடல் கூட இன்னும் மீட்கப்படவில்லை.
இந்த சம்பவம் மே 4ஆம் தேதி நடந்திருக்கிறது. மே 18ஆம் தேதி ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜூலை 19ஆம் தேதி வீடியோ வெளியாகிறது. ஜூலை 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.
இதுபோன்று பல சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இன்று வரை மத்திய அரசு எத்தனை வழக்குகள் பதிவாகியிருக்கிறது என தெரியவில்லை என்று கூறுகிறது. இது மாநிலத்தின் மோசமான நிலையை காட்டுகிறது” என்றார்.
மேலும் கபில் சிபல், “பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை கொண்ட விசாரணை அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு ஒத்துழைத்த மாநில காவல்துறை வழங்கும் அறிக்கையை எப்படி நம்புவது?” என கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட துஷார் மேத்தா, “உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங், “பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை மீண்டும் மீண்டும் ஒரே விஷயம் குறித்து பேச வைப்பது என்பது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். முதலில் காவல் துறையிடம் சொல்ல வேண்டும், அடுத்து சிபிஐ விசாரிக்கும், அவர்களிடம் சொல்ல வேண்டும். எனவே, பல்வேறு தரப்பில் இருந்தும் நிபுணர்களை கொண்ட உயர் மட்ட குழு அமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் பல வழக்கறிஞர்கள் இடையீட்டாளர்களாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் , “ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த அதிகாரிகளும் வெளிமாநில அதிகாரிகளாக இருக்க வேண்டும். சிபிஐ விசாரணை மீது நம்பிக்கையில்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு கண்களை மூடி கொண்டிருக்கிறது” என்று சிறப்பு விசாரணை குழுவுக்கு பரிந்துரைத்தார்.
மற்றொரு வழக்கறிஞரான பன்சூர் ஸ்வராஜ் ஆஜராகி, “மணிப்பூரில் நடந்தது போன்று மேற்கு வங்கத்திலும் நடந்திருக்கிறது. இந்தியாவின் அனைத்து மகள்களுக்கும் பாதுகாப்புத் தேவை” என்றார்.
அப்போது தலைமை நீதிபதி, “அனைத்து மகள்களுக்கும் பாதுகாப்புத் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த இந்த கொடூரத்தை நாட்டில் நடைபெறும் பிற சம்பவங்களுடன் ஒப்பிட முடியாது. தற்போது மணிப்பூர் விவகாரத்தைத் தான் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
மீண்டும் வழக்கறிஞர் ஸ்வராஜ், “மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் குற்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மணிப்பூர் என்ற குறிப்பிட்ட வரம்பில் மட்டும் விசாரிக்க வேண்டாம்” என்று கூற,
அதற்கு தலைமை நீதிபதி, “இந்தியாவின் அனைத்து மகள்களையும் காப்பாற்றுங்கள் என்று சொல்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம்?” என்று சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஸ்வராஜ், அனைத்து மகள்களையும் காப்பாற்ற வேண்டும் என்று பதிலளித்தார்.
அனைத்து தரப்பினரின் வாதங்களைத் தொடர்ந்து வழக்கை நாளை (ஆகஸ்ட் 1) விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 1) காலை மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெறுவதை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறோம். எனவே சிபிஐயை காத்திருக்கச் சொல்லுங்கள் என்று தலைமை நீதிபதி துஷார் மேத்தாவிடம் தெரிவித்தார்.
இந்தசூழலில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இரண்டாவது நாளாக மணிப்பூர் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
பிரியா
மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்: ஸ்டாலின் கடிதம்!
செந்தில்பாலாஜி வழக்கு: வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!