மணிப்பூர் கலவரம்… ஐந்து நாட்களுக்கு இன்டர்நெட் கட்!

Published On:

| By Selvam

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு இன்று (செப்டம்பர் 10) முதல் ஐந்து நாட்களுக்கு இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமுதாய மக்களுக்கும், பழங்குடியின அந்தஸ்து வழங்குவது பற்றி அம்மாநில நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதனை கண்டித்து அங்குள்ள குக்கி பழங்குடியின மக்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி மாநிலம் முழுவதும் பேரணி நடத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட இம்பால் பள்ளத்தாக்கில் மீண்டும் அமைதி திரும்ப வலியுறுத்தி மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

இந்தநிலையில், இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மணிப்பூர் மாநில உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,

“மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், பிஷ்ணுபூர் மற்றும் கக்ச்சிங் மாவட்டங்களில் VPN உள்ளிட்ட இணைய சேவை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு (செப்டம்பர் 10 – 15) தற்காலிகமாக துண்டிக்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கலவரத்தால், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மொபைல் சேவைகள், எஸ்எம்எஸ் சேவைகள் மூலமாக வதந்திகள் பரவினால் பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறுகள் ஏற்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

யெச்சூரி விரைவில் குணமடைய வேண்டும் : ஸ்டாலின்

தமிழகத்தில் 5,000 நீர்நிலைகள் புனரமைப்பு… ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel