manickam tagore modi
|

தத்தளித்த தமிழகம்… படம் பார்த்த மோடி: மக்களவையில் விளாசிய மாணிக்கம் தாகூர்

தமிழகம் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டிய பிரதமர் மோடி, நேற்று திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தது வரலாற்று தவறானது என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 தொடங்கியது. ஆனால் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு, மணிப்பூர் கலவரம் போன்ற விஷயங்கள் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டும் என்றனர்.

ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அமளியால் மக்களவையும், மாநிலங்கள் அவையும் ஒரு வாரமாக செயல்படவில்லை.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 3) மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது மக்களவையில் பேசிய விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் “ஃபெஞ்சல் புயல் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளார்கள். மதுரை, சென்னை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை பல லட்சம் குடிசைகள், ஆடு மாடுகள், விவசாய நிலங்கள், பள்ளிகள், சேதமடைந்துள்ளன.

நிவாரண நிதியாக தமிழக முதல்வர் உடனடியாக ரூ.2000 கோடி வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து வரலாற்று தவறை செய்து கொண்டிருக்கிறது.

2016 வர்தா புயலாக இருக்கட்டும், 2017 புயலாக இருக்கட்டும், 2018 புயலாக இருக்கட்டும். தமிழகம் கேட்ட ரூ.43,993 கோடியில் ரூ.1729 கோடி மட்டும் தான் மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

மத்திய அரசு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை கொடுக்க வேண்டும்.

நேற்று தமிழகம் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டிய பிரதமர் மோடி, திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தது வரலாற்று தவறானது என்பதை தெரிவித்துக்கொண்டு, தமிழகத்திற்கு உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று கோத்ரா கலவரம் குறித்து பேசும் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற திரைப்படத்தை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

சாத்தனூர் அணை விவகாரம் : திமுக அரசுக்கு அன்புமணி வைத்த 7 முக்கிய கேள்விகள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts