மும்பையில் பிரசித்திபெற்ற சித்தி விநாயகர் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட் வைக்கப்பட்டிருந்த டிரேக்களில் எலிக்குட்டிகள் கிடப்பதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக பரிசோதனை நடத்தப்பட்டு, ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் ஆந்திர அரசியலை தாண்டி தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையின் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டு பாக்கெட்டுகளில் எலி குட்டிகள் கிடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில், நீல நிற டிரேவில் லட்டு பாக்கெட்டுகளை எலிகள் கடித்து சேதப்படுத்தி இருப்பதும், அதில் எலிக்குட்டிகள் கிடப்பதும் தெரிகிறது.
எனினும் இதற்கு சித்தி விநாயகர் கோவில் நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியை சேர்ந்தவரும், ஸ்ரீசித்திவிநாயக் கணபதி மந்திர் அறக்கட்டளை தலைவரும், சதானந்த் சங்கர் சர்வாங்கர் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”, பக்தர்களுக்கு தினமும் லட்சக்கணக்கான லட்டுகள் விநியோகிக்கப்படுகிறது. அவை தயாரிக்கப்படும் இடம் சுத்தமாக இருக்கிறது. ஆய்வகத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அனைத்து பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “வீடியோவில் காட்டப்படும் இடம் அசுத்தமாக உள்ளது. அந்த வீடியோ சித்திவிநாயகர் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதல்ல, வெளியில் எங்கோ அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படும்.
மேலும் பக்தர்களின் அச்சத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என சதானந்த் சர்வாங்கர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹெச்.டி.எப்.சி வங்கியில் சேரில் இருந்து விழுந்து பெண் ஊழியர் பலி… வேலை அழுத்தம் காரணமா?
தென் தமிழகத்தில் மழை பெய்யுமா? வெயில் வாட்டுமா?