விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைப் பார்த்த அமெரிக்க நிறுவனமும் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. அதேபோன்று சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனமும் தனது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது.
நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர்இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் இருந்த சகபயணி சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
AI 102 என்ற ஏர் இந்தியா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருந்த போது பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த 70 வயதான பெண் மீது போதையில் இருந்த மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் அவரது இருக்கை அருகே சென்று சிறுநீர் கழித்துள்ளார்.
இதில் அந்த பெண் பயணியின் உடைகளும், உடைமையும் நனைந்தது. விமானம் தரையிறங்கிய பிறகும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர், ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், “சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கையில் உட்கார விரும்பவில்லை என கூறினேன். எனவே, எனக்கு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எனது இருக்கைக்குத் திரும்பும்படி விமான பணியாளர்கள் கூறினர்.
சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கை கவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து துர்நாற்றம் அடித்து கொண்டிருந்தது. விமான பணியாளர்கள் இருக்கையில் கிருமிநாசினி தெளித்தனர்.
அதே இருக்கையில் அமர்வதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். எனக்கு மற்றொரு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.
அன்று முழுவதும் நான் அங்கேயே படுத்து உறங்கினேன். பல பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதிலும் எனக்கு அந்த இருக்கை வழங்கப்படவில்லை” என குற்றம் சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தியபோது, சிறுநீர் கழித்த நபர் தன்மீது புகார் அளிக்கவேண்டாம் என்று அழுது கேட்டுக்கொண்டதால் அந்தப் பெண்ணும் அமைதியாக இருந்துவிட்டார்.
இருவரும் சமாதானமாக சென்றதால் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. மேலும் சம்மந்தப்பட்ட அந்த பயணி 30 நாட்கள் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் வெளியாகி பூதாகரமான நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஷங்கர் மிஸ்ரா மீது புகார் அளித்தது. ஷங்கர் மிஸ்ரா தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து தலைமறைவான மிஸ்ரா, தனது செல்போன் எண்ணையும் அணைத்து வைத்திருந்தார். ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் அவர் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். அவர் பெங்களூருவில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் ஷங்கர் மிஸ்ராவை நேற்றிரவு கைது செய்தனர்.
மேலும் ஷங்கர் மிஸ்ரா வேலை பார்த்து வந்த அமெரிக்க நிதிச் சேவை நிறுவனமான வெல்ஸ் பார்கோவும் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் துணைத் தலைவராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.
ஊழியர்களை தொழில்முறை மற்றும் தனிப்பட்ட நடத்தையில் மிக உயர்ந்த தரத்தில் வைத்துள்ள வெல்ஸ் பார்கோவுக்கு இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையளிக்கின்றன.
எனவே நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் மிஸ்ராவை பணி நீக்கம் செய்வதாக நிர்வாகம் அறிவித்தது.
அதேவேளையில் ஏர் இந்தியா நிறுவனமும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி விமானத்தை இயக்கிய விமானி மற்றும் 4 சிப்பந்திகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டும் விளக்கம் கேட்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான காம்ப்பெல் வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் மதுபானம் வழங்கியது, சம்பவத்தை கையாண்ட விதம், புகாரை பதிவு செய்தது, பிரச்னையை தீர்த்து வைத்தது உள்ளிட்ட அம்சங்களில் உள்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அனுபவங்கள் எங்களுக்கு கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தை சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாகவே விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் இடையே மோதல்கள் நடந்து வருவது அதிகரித்து வருகிறது.
ஒரு பயணி மற்றொரு பயணியை தாக்குவதும், பயணியுடன் விமான ஊழியர்கள் சண்டையிடுவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு தடுக்க கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கலை.ரா
ரிஷப் பண்ட்-க்கு அறுவை சிகிச்சை : மருத்துவமனை தகவல்!
ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன்!