நண்பருக்கு கார் வாங்க தனியார் நிதி நிறுவனத்தில் 2 லட்சம் லோன் எடுத்து கொடுத்தவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடகமாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் நஞ்சன்கூடு அருகேயுள்ள மலப்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஷித்திஷ். இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஷித்திசுக்கு ரூபா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், ஷித்திஷின் நெருங்கிய நண்பரான மணிகண்டன் தனக்கு கார் வாங்க 2 லட்சம் வங்கியில் லோன் எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.
ஷித்திசும் நண்பர்தானே என்று கூறி தனியார் நிதி நிறுவனத்தில் லோன் எடுத்து கொடுத்துள்ளார். இதையடுத்து, மணிகண்டன் கார் வாங்கியுள்ளார். ஆனால், இரு தவணை மட்டுமே கட்டியுள்ளார். இதன் காரணமாக நிதி நிறுவனத்தில் இருந்து அடிக்கடி போன் செய்து, ஷித்திஷை திட்டியதாக தெரிகிறது. ஆபாச வார்த்தைகளால் ஷித்திஷை அர்ச்சித்துள்ளனர்.
இதனால், ஷித்திஷ் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார். இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய ஷித்திஷ் கடந்த 22 ஆம் தேதி இரவு அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலைக்கு முன் 7 நிமிட நேரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது சாவுக்கு மணிகண்டனும் நிதி நிறுவன அதிகாரிகளும்தான் காரணமென்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, போலீசார் ஷித்திஷின் உடலை கைப்பற்றி மைசூரு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட ஷித்திசுக்கு 36 வயதாகிறது.